கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே நீரடியில் இருந்து கடம்பன்கொம்பை வரை 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் சென்று வர தகுதியற்ற சாலையில் ஆம்புலன்ஸை இயக்க டிரைவர் மறுத்ததை அடுத்து இறந்தவரின் சடலத்தை அவரது உறவினர்கள் டோலியில் கட்டி தூக்கிச் சென்ற கொடூரம் நடந்துள்ளது.
கோவை மாவட்டம், கதம்பன்கொம்பை பகுதியில் பழங்குடியினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியானது காரமடை அருகே உள்ளது. இங்குள்ள நீரடி முதல் கதம்பன்கொம்பை வரை சாலையானது வாகனங்கள் செல்ல ஏதுவாக இல்லாத நிலை உள்ளது.
இந்த நிலையில் கதம்பன்கொம்பையை சேர்ந்தவர் மணி (48). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்தும் சிகிச்சை பலனளிக்காததால் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அப்போது காரமடை அருகே நீரடி என்ற பகுதியை ஆம்புலன்ஸ் வாகனம் அடைந்ததை அடுத்து அங்கு சரியான சாலை வசதி இல்லாததால் இதற்கு மேல் வாகனத்தை இயக்க முடியாது என கூறி ஆம்புலன்ஸ் டிரைவர் மறுத்துவிட்டார். இதையடுத்து ஊரின் உள்ளே இருந்து ஏராளமான ஆண்கள் வந்து இறந்த உடலை துணியில் சுற்றினர். மேலும் டோலி மூலம் தோளில் வைத்து 3 கி.மீ. தூரத்திற்கு மணியின் உடலை சுமந்து சென்றனர். பின்னர் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சாலை வசதி இல்லாததால் டோலி மூலம் இறந்த உடலை தூக்கிச் சென்ற வீடியோ ஞாயிற்றுக்கிழமை சமூகவலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து பழங்குடியினர் கூறுகையில், கதம்பன்கொம்பை கிராமம் என்பது நெல்லித்துறை பஞ்சாயத்திற்கு கீழ் வருகிறது. இங்கு 15 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு சாலை வசதி அமைத்துக் கொடுத்தால் வசதியாக இருக்கும். இதுகுறித்து காரமடை வனச்சரகத்திடமும் மேட்டுப்பாளையம் தாசில்தாரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறோம் என்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 3 கி.மீ. தூரத்திற்கு சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் அங்கு வாகனங்களை இயக்க முடியாது. மக்கள் கஷ்டப்படுவதை நாங்கள் அறிவோம். சாலை வசதி செய்து தருமாறு அரசிடம் மீண்டும் கேட்கவுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது போல் பல்வேறு மலைவாழ் கிராமங்களில் மின்சாரம், சுத்தமான குடிநீர், சாலை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த குண்டும் குழியுமான சாலையிலேயே கர்ப்பிணிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை தூக்கி வருகிறார்கள். தற்போது இறந்தவர்களையும் தூக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாததால் விஷபாம்பு கடித்தாலும் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருப்பதால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply