போத்தனூர் அருகே நடுரோட்டில் கற்களை வீசி தாக்கி கொண்ட வடமாநில வாலிபர்கள்..!

கோவை போத்தனூர் அருகே நடுரோட்டில் கற்களை வீசி தாக்கி கொண்ட வட மாநில வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

கோவை போத்தனூர் – செட்டிபாளையம் ரோட்டில் வடிவு நகர் உள்ளது. இதன் பிரதான சாலையில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட வட மாநில வாலிபர்கள் ஒருவருக்கு, ஒருவர் கற்களால் வீசி சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்தனர். இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும் வட மாநிலத்தினர் தொடர்ந்து சரமாரியாக தாக்கிக் கொண்டிருந்தனர். சிலர் சண்டையை விலக்க முயன்றனர். ஆனால் அவர்களையும் தாக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் போத்தனூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதற்குள் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழக இளைஞர்களும், வட மாநிலத்தினரும் டாஸ்மாக் பாரில் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். சிலர் சாலையில் சென்ற பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கினர். தற்போது கோவையில் இது போன்ற நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே கோவையில் வட மாநிலத்தினர் வேலை செய்யும் இடம் மற்றும் அவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் உள்ளவர்கள் யாரேனும் அவர்களது ஊரில் குற்ற பின்னணி கொண்டவர்களா? கோவையில் பதுங்கி வேலை செய்கின்றனரா? என்பது குறித்தும், வட மாநிலத்தவர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவன உரிமையாளர்களை அழைத்து போலீசார் கூட்டம் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.