மாமல்லபுரத்தில் சொகுசு விடுதியில் 100 சொகுசு கார்கள்.. ஒரு பொய்யில் 50 கோடியை அள்ளிய கோவை இளைஞர்கள்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் லஸ்பேட்டையில் வசிக்கும் அசோகன் என்பவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி மோசடி செய்துள்ளது ஒரு கும்பல்.. அந்த கும்பல் நாடு முழுவதும் ரூ.50 கோடி மோசடி செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் கோவையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த அசோகன் என்பவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பிய அவர் குறுஞ்செய்தி வந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.பின்னர் அவர்கள் கூறியபடி கிரிப்டோகரன்சியில் ரூ.98 லட்சத்தை பல்வேறு தவணைகளாக முதலீடு செய்திருக்கிறார். அதன் பின்னர் அவரது கணக்கில் ரூ.9 கோடி இருந்தது தெரியவந்தது.ஆனால் அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இதனால் அவர் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்த நபர் எடுக்கவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அசோகன் இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டதை புதுச்சேரி போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்து சென்றனர்.

கோவை தெற்கு வெங்கடசாமி சாலை மேபிளவர்ஸ் மெடோஸ் பகுதியை சேர்ந்த 36 வயதாகும் நித்தீஷ் ஜெயின் , 40 வயதாகும் அரவிந்த்குமார் ஆகிய 2 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்திருக்கிறார்.பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, இந்த வழக்கில் கோவையை சேர்ந்த தாமோதரன், நூர்முகமது, சந்தானம், இம்ரான்பாஷா, நந்தியப்பன், கணேசன், ஆலியா, ரேஷ்மா உள்பட சென்னை, பெங்களூரு பகுதியை சேர்ந்த 10 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்பல் கடந்த கடந்த 2022-ம் ஆண்டு கோவையில் ஆஷ்பே என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி உள்ளார்கள். அதன் தொடக்க விழாவில் சினிமா பிரபலங்கள் பங்கேற்க வைத்துள்ளனர். 3 மாதங்களுக்கு பிறகு மாமல்லபுரத்தில் சொகுசு விடுதியில் நடந்த விழாவில் பிரபல நடிகை மூலம் தங்களிடம் முதலீடு செய்த 100 பேருக்கு கார்களை பரிசாக வழங்கி, அதிக முதலீட்டாளர்களை கவர்ந்திருக்கிறார்கள்..இந்த கும்பல் புதுச்சேரியைச் சேர்ந்த 9 பேரிடம் ரூ.3 கோடியே 60 லட்சம் மோசடி செய்துள்ளது. இதேபோல் டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்பட நாட்டின் பல்வேறு பகுதியில் ரூ.50 கோடி வரை மோசடி செய்திருப்பது புதுச்சேரி போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 2 பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.