கோவை: சென்னையில் உள்ள மெரினா கடற்கரை போல், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி, மக்கள் எந்த நேரமும் ரிலாக்ஸ் ஆகும் இடமாக இருக்கிறது. கோவை மாநகர மக்களின் முக்கியமான பொழுதுபோக்கு இடமாக ரேஸ்கோர்ஸ் இருக்கிறது. இங்குள்ள அழகிய மரங்கள், நடைபாதைகள்,, பூங்காக்கள், கட்டுமானங்கள் ரம்மியமாக இருக்கும்.. இதை பார்க்க வருவோரால் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரூ.9.5 கோடியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
கோவை மாநகர மக்களின் முக்கியமான பொழுதுபோக்கு தலமாக ரேஸ்கோர்ஸ் சாலை மாறி உள்ளது. காலை மற்றும் மாலையில் நடைபயிற்சி செய்வோர் அதிக அளவில் வருவார்கள். இதேபோல் குழந்தைகள் அங்குள்ள பூங்காக்களில் விளையாடுவதற்காக அதிக அளவில் வருகிறார்கள். மரங்களின் நிழலில் இரவு பகல் எந்த நேரமும் காதலர்களும் வலம் வருகிறார்கள். ரேஸ்கோர்ஸ் சாலையை பொறுத்தவரை வெயிலே தெரியாத அளவிற்கு அதிக மரங்கள் நிறைந்த சாலையாக உள்ளது.
முழுக்க முழுக்க மக்கள் பொழுதுபோக்கும் இடமாக இருக்கிறது. கோவையின் விஐபி ஏரியாவாக இருக்கிறது. கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் கடந்த 10 ஆண்டுகளில் அடையாளமே தெரியாத அளவிற்கு பல மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச்சாலையில் இரு இடங்களில் பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இரு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஓரிடத்தில் ஜல்லிக்கட்டு காளையை ஒரு வீரர் அடக்குவது போலவும், இன்னொரு இடத்தில் இரு கரங்களுக்கு நடுவே உலக உருண்டை சுற்றுவது போலவும் சிலைகள் நிறுவப்பட்டிருக்கிறது.. புத்தாண்டு கொண்டாட்டம், சனி, ஞாயிறு வார இறுதி கொண்டாட்டங்கள், திருவிழா கொண்டாட்டங்கள் நடைபெறும் இடமாக ரேஸ்கோர்ஸ் இருக்கிறது. சென்னை மெரினான கடற்கரை போல் ஏராளமான மக்கள் எந்தநேரமும் வந்து செல்கிறார்கள். இதனால் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. சாலையோரங்களில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்கிறார்கள். இதனால் ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக ரேஸ்கோர்ஸ் ரோடு, கே.ஜி. சிக்னல் அருகில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது.கோவை ரேஸ் கோர்ஸ் சாலையை பொறுத்தவரை அதிகரித்து வரும் புதிய வணிக நிறுவனங்கள் மற்றும் பெருகி வரும் வாகனங்களால் நெரிசல் அதிகமாக உள்ளதாக கூறிய அதிகாரிகள், சாலை ஆக்கிரமிப்புகளால் மாநகரின் மத்திய மண்டலத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் ரோடு, அரசு கலைக்கல்லூரி ரோடுகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றார்கள். பாதசாரிகள் செல்லும் பாதைகளில் கார்கள் நிறுத்தப்படுவது, உணவுக் கடைகள் மற்றும் பிற தற்காலிக கடைகள் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார் இதைத்தொடர்ந்து வாகனங்களை நிறுத்தும் வசதிக்காக புதிய திட்ட வரைவு தயாரிக்கப்பட்டிருக்கிறது இதன்படி ரூ.9.5 கோடியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் 86 கார்களை நிறுத்தும் வகையில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைய போகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் தரைமட்ட அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறிய அதிகாரிகள், ரேஸ்கோர்ஸ் விநாயகர் கோவில் அருகேயும் வாகன நிறுத்துமிடம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யுமாறு கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மாநகராட்சி திட்ட வரைவு அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்ததும் பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.
Leave a Reply