கோவை: கோவை, காந்திபுரத்தில் உள்ள கேஎஃப்சி நிறுவனத்தில் சிக்கன் சாப்பிட்ட பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த ஆண்டு ஒருமாத காலம் பாதிக்கப்பட்ட வழக்கில், நுகர்வோர் நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கோவை, காந்திபுரத்தில் பிரபல கேஎஃப்சி சிக்கன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உடுமலையைச் சேர்ந்த கார்த்திகா என்பவர் 2024 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி இரவில் சிக்கன் சாப்பிட்டுள்ளார். அன்று இரவு முதல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அப்பெண் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கேஎஃப்சி நிறுவனம் சார்பில் 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடாகவும், 5 ஆயிரம் ரூபாய் செலவுகளுக்கானது என்று மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் கார்த்திகா கூறியதாவது: நான் கோவையில் விடுதியில் தங்கி பணியாற்றி வந்தேன். கடந்த 2024 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி நண்பருடன் காந்திபுரம் கேஎஃப்சி உணவகத்துக்குச் சென்று சிக்கன் சாப்பிட்டோம். எங்களுக்கான ஆர்டரை வாங்கும்போதே ஒரு பீஸ் சிக்கனை தூக்கி குப்பைத் தொட்டியில் ஊழியர்கள் போட்டனர். கேஎஃப்சி பெரிய நிறுவனம் எதுவும் இருக்காது வழக்கமாக சாப்பிடுவது தானே என்று நினைத்து எங்களுக்கு கொடுத்த சிக்கனை நாங்கள் சாப்பிட்டு வந்தோம்.
சாப்பிட்டு முடித்த 1 மணி நேரம் கழித்து எனக்கு வயிற்றில் மிகுந்த அழுத்தம் ஏற்பட்டது. அடுத்த நாள் காலையில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டேன். நான் அன்று என்னுடைய புதிய தொழிலைத் தொடங்கவிருந்தேன். ஆனால், அந்த நிகழ்வில் இருந்து பாதியிலேயே கிளம்பி அருகில் உள்ள ஆரம்ப நிலைய சுகாதார நிலையத்துக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.
மருந்து மாத்திரைகள் எடுத்தும் சரியாகவில்லை. மதிய வேளையில் கடும் வயிற்று வலி, தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தியால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். மாலையில் எனது நண்பருடன் சென்று ராமகிருஷ்ணா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஒருவார காலம் விடுதியில் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் சாப்பாடு உட்கொண்டு வந்தேன். என்னால் சமாளிக்க முடியாமல் பின்னர் வீட்டுக்கே திரும்பிச் சென்றுவிட்டேன். வழக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு முதலில் இல்லை. 25 நாட்களுக்குப் பின்னர் தான் வழக்கு கொடுத்தேன். 350 ரூபாய்க்கு சாப்பிட்ட சிக்கனால் ஒரு மாத காலம் நான் மிகவும் சிரமத்திற்கு ஆளானேன். எந்தவொரு சாப்பாடும் சாப்பிட முடியவில்லை, மிகுந்த அளவில் மருத்துவச் செலவுகளும் ஒருபக்கம் ஆனது. அந்த கோவத்தில் தான் வழக்கு கொடுத்தேன். ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. மருத்துவச் செலவுகளுக்கு 5 ஆயிரம் மற்றும் இழப்பீடாக 5 ஆயிரம் என மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
Leave a Reply