கோவைக்கு குட்நியூஸ்! 22 விதமான தோட்டங்களுடன் முக்கால்வாசி ரெடியான செம்மொழி பூங்கா!

கோவை: கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கும் திட்ட பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பூங்கா காந்திபுரம் அருகே மத்திய சிறைச்சாலை அருகே அமைகிறது.கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கும் திட்டம், அங்கு நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் 2010 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் கிடப்பில் இருந்தது.இதையடுத்து 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் செம்மொழிப் பூங்கா திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் தொடங்கின. இதற்காக காந்திபுரம் மத்திய சிறைச் சாலை அருகே 165 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டது.

45 ஏக்கர்

முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பில் ரூ 167.25 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுகின்றன. செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீர் வனம், நட்சத்திர வனம், நலம் தரும் வனம், நறுமண வனம் என செம்மொழிப் பூங்காவில் 22 விதமான தோட்டங்கள் அமைக்கப்படுகின்றன.

கார் பார்க்கிங்

இது மட்டுமல்லாமல் இயற்கை அருங்காட்சியகம், திறந்தவெளி அரங்கம், இயற்கை உணவகம் உள்ளிட்டவை அமைகிறது. அது போல் 17 ஆயிரம் சதுர மீட்டரில் விசாலமான வாகன நிறுத்துமிடம் ரூ 7 கோடியில் அமைக்கப்படுகிறது. இங்கு 10 பேருந்துகளையும் 380 நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்த முடியும்.

அது போல் நிலத்தடி நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி, மழைநீர் வடிகால், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு குழாய்கள், கூடுதல் மேம்பாட்டு பணிகள் 30 சதவீத அளவில் முடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணிகளும் விரைந்து முடிக்கப்படும்.

65 சதவீதம் பணிகள்:

ஆடியோ, வீடியோ அமைப்புகள், தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போல் டிக்கெட் கவுன்ட்டர் கட்டடம் அமைக்கும் பணிகளும் 65 சதவீதம் நடந்து முடிந்துள்ளது. அது போல் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளும் 95 சதவீதம் முடிந்தன.

3 கழிப்பறைகள்:

அது போல் 3 கழிப்பறைகள் அமைக்கும் பணியும் 80 சதவீதம் முடிவடைந்தன. தோட்டத்தை பாதுகாக்கும் நபருக்கான அறையும் 60 சதவீதம் முடிவடைந்துவிட்டன. மேலும் உணவகங்கள், கடைகள் அமைக்கும் பணிகளும் 60 சதவீதம் முடிவடைந்துவிட்டன.இந்த பூங்காவில் சூரியஒளி மின்சாரம் அமைக்கும் திட்டம், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் உள்ளிட்டவையும் அமைகிறது. இந்த செம்மொழிப்பூங்கா தற்போது 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் வரும் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என தெரிகிறது.

நுழைவுக் கட்டணம் எவ்வளவு?:

இந்த பூங்காவுக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ 25-ம் , சிறியவர்களுக்கு ரூ 10-ம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் நடைப்பயிற்சிக்கு மாதம் ரூ 100, கேமராவுக்கு ரூ 25, வீடியோ கேமராவுக்கு ரூ 150, திரைப்பட ஒளிப்பதிவுக்கு ஒரு நாளுக்கு ரூ 50 ஆயிரம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.