சர்ச்சை வீடியோ.. ஐகோர்ட்டில் வழக்கு தள்ளுபடி.. கோவையில் பிரபல ரவை நிறுவனம் விளக்கம்

கோவை: கோவையில் உள்ள மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தின் மீது போடப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுபற்றி கோவை மயில் மார்க் சம்பா ரவை நிறுவன பங்குதாரர்கள் செந்தில் குமார், பாலசுப்பிரமணியன், பொன்முருகன், தமிழக வியாபாரிகள் சம்மேளன ரங்கே கவுடர் வீதி தலைவர் மணி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து நேற்று பேட்டி அளித்தனர்.அப்போது அவர்கள் கூறுகையில், கோவை ரங்கே கவுடர் வீதியில் எங்களுடைய மயில் மார்க் சம்பா ரவை நிறுவனம் 60 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. சம்பா ரவை என்பது தமிழக மக்களின் அன்றாட உணவு முறையில் உள்ள ஒரு விஷயமாக உள்து. ஆனால் எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மயில் மார்க் சம்பா ரவை சாப்பிடும் மக்களிடம் பீதியை சிலர் வாட்ஸ் அப்பில் வீடியோவை பரப்பி கிளப்பினார்கள். இதுபற்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தோம்.

இதனிடையே மயில் மார்க் சம்பா ரவை சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த ரவிகாந்த் என்பவர் கடந்த ஆண்டு பொய் வழக்கை தாக்கல் செய்திருந்தார். இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மயில் மார்க் சம்பா ரவை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சம்பா ரவை தயாரிப்புகளை உணவு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.அதில் மயில் மார்க் சம்பா ரவையில் எந்தவிதமான வேதிப்பொருள், பூச்சிக்கொல்லி மருந்தோ கலக்கவில்லை என சோதனை அறிக்கையில் தெரியவந்தது. இந்த அறிக்கையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் .மேலும் வழக்கை தாக்கல் செய்த ரவிகாந்த் என்பவரின் முகவரிக்கு விசாரணைக்கு நேரில் வருமாறு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால் ரவிகாந்த் நேரில் ஆஜராகவில்லை.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்னிலையில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தின் மீது போடப்பட்ட பொய் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில் மயில் மார்க் சம்பா ரவை மீது போடப்பட்டது ஒரு புனையப்பட்ட பொய் வழக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கை தாக்கல் செய்த ரவி காந்த் ஒரு தனியார் ஆய்வக அதிகாரியிடம் பொய்யான மதிப்பீட்டை பெற்று அதை கோர்ட்டில் தாக்கல் செய்திருப்பதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. இதற்கு பின்புலமாக கோவையில் உள்ள தனியார் நிறுவனம் இருப்பதாகவும் எங்களுக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் தான் மயில் மார்க் சம்பா ரவை குறித்து கடந்த மாதத்தில் அவதூறு வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பினார்கள். இதுகுறித்து நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தோம்.

இது குறித்து விசாரணைக்கு நேரில் கடந்த 22 ஆம் தேதி ஆஜராகுமாறு ரவி காந்த்திற்கு கோவை கடை வீதி போலீசாரும், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரும் சம்மன் அனுப்பினார்கள். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் என கூறிகொண்டு வந்தவர் மட்டும் ஆஜரானார்.எங்கள் நிறுவனம் மீதான அவதூறு வீடியோவை பரவ விட்ட ரவி காந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறோம். சம்பா ரவை என்பது தமிழக மக்களின் அன்றாட உணவு முறையில் உள்ள ஒரு விஷயம். இதில் எங்கள் பிராண்ட் பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களிடம் சம்பா ரவை சாப்பிடும் மக்களிடம் பீதியை கிளப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளோம்” இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.