கோவை ஹோட்டல்களில் பிளாஸ்டிக் ஷீட்டுகளில் அவிக்கப்படும் இட்லி? உணவு பாதுகாப்பு சோதனை வெளிவந்த உண்மை

கோவை: கோவையில் ஓட்டல்களில் இட்லியை வேக வைக்க காட்டன் துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.இட்லி என்பது எளிதான மற்றும் விரைவில் ஜீரணிக்கக் கூடிய ஒரு உணவு. இது ஆவியில் வைத்து வேக வைக்கப்படுவதால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு இந்த இட்லி பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த இட்லியை பொதுவாக இட்லி தட்டில் எண்ணெய்யை லேசாக தடவி வேக வைப்பார்கள். அப்போதுதான் அந்த தட்டில் இருந்து எடுக்க முடியும். அந்த எண்ணெய் கூட உடலுக்கு வேண்டாம் என நினைப்பவர்கள் ஒரு காட்டன் துணிகளில் இட்லியை வேக வைத்து எடுப்பார்கள். பெரிய ஹோட்டல்கள் பெரிய பெரிய ஹோட்டல்களிலும் காட்டன் துணியை கொண்டுதான் இட்லி அவிக்கப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் சில உணவகங்களில் இட்லியை வேக வைக்க பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. உரிய நடவடிக்கை இதைத் தொடர்ந்து எழுந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனைத்து மாநில உணவு பாதுகாப்புத் துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.

கோவை உணவகங்கள் இதன் பேரில் கோவையில் உள்ள சில உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். அது போல் பேக்கரிகள், டீக்கடை, கரும்பு ஜூஸ், ஜூஸ் கடைகள் உள்ளிட்டவைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.உணவு பாதுகாப்புத் துறை இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் கூறுகையில், கடந்த இரு தினங்களாக கோவையின் கோவில்பாளையம், அன்னனூர், குன்னத்தூர், காந்திபுரம், வடவள்ளி, புலியகுளம், உக்கடம், சுந்தராபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தோம். காலாவதியான பொருட்கள் இங்கு காலாவதியான 18 லிட்டர் குளிர்பானங்கள், 26 பிஸ்கெட் பாக்கெட்டுகள், 12 கிலோ அழுகிய பழங்கள் , 7 கிலோ டீத்தூள் கழிவுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து அழித்துள்ளோம்.

12 கடைகளுக்கு நோட்டீஸ் 12 கடைகளுக்கும் நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது. சில உணவகங்களில் பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தி இட்லி அவிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தோம். ஆனால் அப்படி எதும் இல்லை. ஆனால் பரிமாறுவதற்காக வாழை இலை போன்ற பிளாஸ்டிக் தாள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தோம். அவை சுமார் 5 கிலோ அளவுக்கு இருந்தன. இட்லி வேக வைக்க துணி இட்லி வேக வைக்க துணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்த அனுமதி கிடையாது என அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நோட்டீஸ் வழங்கப்பட்ட 12 கடைகளுக்கு ரூ 5000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புகையிலை விற்பனை செய்ததாக 3 கடைகளுக்கு 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. புகையிலையும் 7.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பிளாஸ்டிக் பயன்பாடு தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் சில இடங்களில் பிளாஸ்டிக் பைகளில் காபி, டீ, ஜூஸ் போன்றவை ஊற்றி தருகிறார்கள். அது போல் உணவை பார்சல் செய்வதற்கும் இந்த பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்கு கேடு விளைவிக்கும். மேலும் இவை பூமியில் போடுவதால் அவை மக்காமல் நிலத்தடி நீரையும் மண் வளத்தையும் பாழாக்குவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் சுடச்சுட பிளாஸ்டிக்கில் பொங்கல், இட்லி, உப்புமா, கிச்சடி, தோசை உள்ளிட்டவை பார்சல் செய்யப்பட்டு அவற்றை சாப்பிடுவதால் இவை உடலுக்கும் பெரும் கேடு விளைவிக்கும்.