கோவை; கோவையில் நடந்த கனிமவள கொள்ளையில், தொடர்புடைய அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள, ஆதாரம் சேகரிக்கும் பணியில், மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.
கோவை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள, அரசு புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்கள் மற்றும் நீரோடைகளில் இருந்து, கனிம வளங்கள் கடத்தி விற்பனை செய்யப்பட்டது. இதை தமிழக அரசும், அதிகாரிகளும் தடுக்க தவறினர்.இதையடுத்து ஐகோர்ட், கனிம வள கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் வழங்கியது. சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டு, கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தது.
இச்சூழலில், உஷாரான தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும், ‘கனிம வளம் கடத்தப்பட்ட இடங்களில் பணியாற்றிய, கிராம நிர்வாக அலுவலர்களை இடமாறுதல் செய்தது. பேரூர் மற்றும் கோவை வடக்கு தாலுகாக்களை சேர்ந்த, 19 கிராம நிர்வாக அதிகாரிகளை, அருகருகே உள்ள கிராமங்களுக்கு மாறுதல் செய்தது.தெற்கு கோட்டாட்சியர் எல்லைக்குட்பட்ட பேரூர் தாலுகாவை சேர்ந்த, 14 வி.ஏ.ஓ.,க்கள் மதுக்கரை தாலுகாவுக்கும், வடக்கு கோட்டாட்சியர் எல்லைக்குட்பட்ட, வடக்கு தாலுகாவை சேர்ந்த ஐந்து வி.ஏ.ஓ.,க்கள், மேட்டுப்பாளையம் தாலுகாவுக்கும் மாற்றப்பட்டனர்.
ஆதாரம் திரட்டல்:
இதையடுத்து, ஐகோர்ட் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, பேரூர் மற்றும் கோவை வடக்கு தாலுகாவில் பணிபுரிந்த வி.ஏ.ஓ., ஆர்.ஐ., மற்றும் தாசில்தார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான ஆதாரங்களை திரட்டி வருகிறது.
வலுவான ஆதாரங்கள் கிடைத்த பின், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுவர்.சிறப்பு புலனாய்வு குழு விசாரணை முடிந்த பிறகே, அவர்களுக்கு பணி வழங்கப்படும் என, உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இது குறித்து, மேலும் அவர் கூறுகையில், ‘கோர்ட் உத்தரவை மதிக்க வேண்டும். அதற்காக சரியான வழியில் தற்போது மாவட்ட நிர்வாகம் சென்று கொண்டிருக்கிறது. அதனால் விரைவில், கனிமவள கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்ட, அதிகாரிகளையும் பணியாளர்களையும், ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவு வெளியாகும்’ என்றார்.
Leave a Reply