கோவை; கோவையில் உள்ள தி.மு.க., மற்றும் ம.தி.மு.க., அலுவலகங்களுக்கு, வணிக பயன்பாட்டுக்கான சொத்து வரியை மாநகராட்சி நிர்ணயித்துள்ளதால், அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இம்மாதம், 31ம் தேதியுடன் நடப்பு நிதியாண்டு (2024-25) முடிகிறது. மூன்று வாரங்களே இருப்பதால், வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இச்சூழலில், கோவையில் உள்ள அரசியல் கட்சிகளின் அலுவலகங்களை, வணிக பயன்பாடாக வகைப்படுத்தி, சொத்து வரி விகிதங்களை மாற்றி அமைத்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. டாடாபாத் பகுதியில் உள்ள தி.மு.க., மாவட்ட அலுவலகத்துக்கு இதுநாள் வரை, ஆறு மாதத்துக்கு ஒருமுறை சொத்து வரியாக, 2,000 ரூபாய் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது, ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இத்தொகையை குறைக்கக் கோரி, மாநகராட்சிக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.இதேபோல், சித்தாபுதுாரில் உள்ள ம.தி.மு.க., அலுவலகத்துக்கு, ஆறு மாதத்துக்கு ஒருமுறை, 16 ஆயிரத்து, 467 ரூபாய், குப்பை வரியாக, 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக பயன்பாடு எதுவும் இல்லை.பழைய வீட்டு கட்டடத்தில் அலுவலகம் செயல்படுகிறது. ஆனால், வணிக பயன்பாடு என வகை மாற்றம் செய்து, வரித்தொகை மாற்றப்பட்டு உள்ளது.இதேபோல், எம்.எல்.எப்., அலுவலகத்துக்கு அரையாண்டு வரியாக, 846 ரூபாய் செலுத்தப்பட்டது; இப்போது, 64 ஆயிரம் ரூபாய் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேபோல், மா.கம்யூ., அலுவலகத்துக்கு இதற்கு முன் ஆறு மாதத்துக்கு ஒருமுறை ரூ.2,345 வீதம் சொத்து வரி செலுத்தப்பட்டது; இதை, 44 ஆயிரத்து, 430 ரூபாயாக உயர்த்தப்பட்டு, ஓராண்டுக்கு, 88 ஆயிரத்து, 861 ரூபாய் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ.கம்யூ., அலுவலகத்துக்கு, 47 ஆயிரம் ரூபாயாக சொத்து வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இது, அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வணிக பயன்பாடு இல்லாததால், அலுவலக பயன்பாடு என்கிற வகைப்பாட்டுக்கு, சொத்து வரியை மாற்றித்தர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.இதுதொடர்பாக, பில் கலெக்டர்களிடம் கேட்ட போது, ‘குடியிருப்பு, தொழிற்சாலை, வணிக பயன்பாடு, ஸ்டார் ஓட்டல், அலுவலக பயன்பாடு என, முந்தைய மென்பொருளில் வகைப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழிற்சாலை என மூன்று பிரிவுகளில் இருக்கிறது.அலுவலக கட்டடங்களையும், வர்த்தகம் செய்யும் கட்டடங்களையும் வணிக பயன்பாடாக சேர்த்திருப்பதால், முரண்பாடு ஏற்பட்டுள்ளது. சொத்து வரிக்கான மென்பொருளில் திருத்தங்கள் செய்ய வேண்டும்’ என்றனர்.
Leave a Reply