பாரதியார் பல்கலைக்கு வனத்துறை ‘நோட்டீஸ்’

கோவை; வன விலங்குகள் நடமாட்டத்தைத் தவிர்க்க, பல்கலை வளாகத்தில் புதர்களை அகற்றி சுத்தமாக வைக்க, பாரதியார் பல்கலைக்கு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறியதாவது: பாரதியார் பல்கலை வளாகத்தில், சிறுத்தை நடமாட்டம் தற்போது இல்லை. பல்கலை வளாகத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பு பயன்படுத்தப்படாமல் தரிசு நிலம்போல உள்ளது. அங்கு புதர்களை அகற்றி, சுத்தமாக பராமரிக்க அறிவுறுத்தியுள்ளோம். மின் வேலி அமைக்கவும் வலியுறுத்தியுள்ளோம்.

உணவுக் கழிவு கொட்டப்படுவதால், அவற்றைத் தேடி வனவிலங்குகள் வருகின்றன. எனவே, அங்கு உணவுக் கழிவு கொட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பல்கலை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.தொண்டாமுத்தூர் ஓணாப்பாளையம் பகுதியில், வனத்தை ஒட்டிய விவசாய நிலத்தில் சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிக்க, கூண்டு வைக்கப்பட்டுள்ளது. தடாகம் பகுதியில் ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிந்தது. அந்த யானை, ஒரு யானைக் கூட்டத்துடன் இணைந்து விட்டது. இருப்பினும் அதனைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.