வீட்டு கடன் வாங்குறீங்களா.. காப்பீடும் செய்துள்ளீர்களா.. கோவை பெண்ணுக்கு நடந்தது தெரியுமா?

கோவை: பொதுவாக காப்பீடு என்பது இன்றைய வாழ்க்கை சூழலில் மிக முக்கியம்.. காரணம் எப்போது என்ன வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். மருத்துவ அவசர செலவுக்காகவும், நம்மை நம்பி உள்ளவர்களின் எதிர்காலத்திற்காகவும் காப்பீடு செய்வது அவசியம் ஆகும். ஆனால் அதேநேரம் காப்பீடு செய்தவர்களுக்கு அந்த காப்பீடு சின்ன சின்ன காரணங்களுக்காக நிராகரிக்கப்படுவது அதிகமாக உள்ளது. அப்படி வீட்டுக்கடனுக்கு காப்பீடு செய்த பெண்ணுக்கு என்ன நடந்தது.. நீதிமன்ற உத்தரவு என்ன என்பதை பார்ப்போம்.

பலர் இன்றைக்கு காப்பீடு எடுக்கிறார்கள்.. ஆனால் காப்பீடு முறையாக கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மருத்துவத்திற்கு காப்பீடு செய்தவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காப்பீட்டு நிறுவனங்கள் பணம் தருகின்றன. இதேபோல் விபத்து காப்பீட்டையும் சரியான கட்டுப்பாடுகளுடன் மட்டுமே காப்பீட்டு நிறுவனங்கள் பணம் தருகின்றன.

அதேபோல் வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகன கடன் உள்பட பல்வேறு வகையான கடன்களுக்கும் காப்பீடு உள்ளது. விபத்து ஏற்பட்டு கடனை கட்ட முடியாமல் போனால் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டு கடனை கட்ட முடியாமல் போனால், அந்த கடன் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும். அதேபோல் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கும் கடனை கட்டும் முன் மரணம் அல்லது நிரந்த ஊனம் அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் வீட்டுக்கடன் தொகை முழுவதையும் காப்பீட்டு நிறுவனமே செலுத்தும்.பட்டா உள்ளிட்ட ஆவணங்களை வங்கியில் வாங்கிக் கொள்ள முடியும்.இப்போது எல்லா கடன்களுமே இந்த அளவிற்கு பாதுகாப்பாகவே வழங்கப்படுகின்றன. பாதுகாப்பற்ற கடன்கள் என்றாலும் அந்த கடனுக்கு காப்பீடு கிடைப்பதால் வங்கிகளுக்கு எந்த பிரச்சனையும் இருப்பது இல்லை.. ஆனால் உண்மையில் காப்பீடு என்பது முறையாக கிடைக்கிறதா என்றால் பல்வேறு கேள்விகள் எழுகிறது. ஏனெனில் காப்பீடுகள் சின்ன சின்ன காரணங்களுக்காக நிராகரிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கோவையில் நடந்தது பற்றி பார்ப்போம்.

கோவை அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்த ஆறுசாமி, கோவை நுகர்வோர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறுகையில், கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள தனியார் வங்கியில் என்னுடைய மனைவி பழனியம்மாள் பெயரில் ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் வீட்டு கடன் பெற்று இருந்தோம். இதற்காக புனேவை தலைமையிடமாக கொண்ட ஒரு காப்பீடு நிறுவனத்தில் ரூ.12 ஆயிரத்து 853 பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்திருந்தோம். ஆனால் என்னுடைய மனைவி பழனியம்மாள் உடல் நலக்குறைவால் கடந்த 2022-ம் ஆண்டு இறந்து போனார். 10 வயது மகள் மட்டும் எங்களுக்கு வாரிசாக இருக்கிறார். கடன் வாங்கும்போது காப்பீடு செய்தால் குடும்பத்துக்கு பாதுகாப்பு என்றும், ஆபத்து கால இழப்பீடு உள்ளிட்டவை கிடைக்கும் என்று கூறியதால் கடனுக்கு காப்பீடு பெற்றிருந்தோம். ஆகவே நாங்கள் என் மனைவியின் மரணம் குறித்து முறைப்படி கடன் பெற்ற வங்கிக்கு தெரிவித்திருந்தோம்.

ஆனால் எங்களுக்கு 4-வது பட்டுவாடா தொகையை வழங்காமல் வங்கி நிர்வாகத்தினர் முடக்கினர். மேலும் கணக்கை முடக்காமல் தங்களுடைய அசல் மற்றும் அசலுக்கான வட்டியை கழித்துக் கொண்டே வந்தனர். எனவே காப்பீடு மற்றும் உரிய விதிமுறை பின்பற்றவில்லை. உரிய இழப்பீடு வழங்குவதுடன், பத்திரத்தை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.மனுவை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி தங்கவேலு, உறுப்பினர்கள் சுகுணா, மாரிமுத்து ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் மரணம் அடைந்த பழனியம்மாளின் வீட்டு கடனுக்கான பாக்கி தொகையை அவர் மரணம் அடைந்த தேதி முதல் இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டும். வங்கி நிர்வாகம் வங்கி கடனை முடித்து கடனுக்கு ஈடாக பெறப்பட்ட வீட்டு பத்திரத்தை திரும்ப வழங்க வேண்டும், இருதரப்பினரும் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.30 ஆயிரமும், கோர்ட்டு செலவாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டனர்.