கோவை: பொதுவாகவே மார்ச் மாதத்தில் தான் கோவை பகுதியில் வெயில் அதிகமாக ஆரம்பிக்கும்.. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வெயில் அதிகரித்து விடுகிறது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கோவையில் கிளைமேட் அடியோடு மாறிக்கிடக்கிறது. ஒரு காலத்தில் குளுகுளுவென இருந்த கோவை மரங்களை இழந்து தவிக்கிறது. பொள்ளாச்சி பக்கத்திலேயே இருக்கும் கோவையில் இளநீர் விலை ரூ.50-க்கு விற்பனையாகிறது என்பது கசப்பான உண்மை.தமிழ்நாட்டில் எவ்வளவு வெயில் அடித்தாலும் வாழ்வதற்கு உகர்ந்த சொர்க்க பூமி என்றால் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் தான்.. ஏனெனில் இங்குள்ள கால நிலை அவ்வளவு அருமையாக இருக்கும். இதில் கோவை சற்று விஷேசமானது.
முற்றிலும் நகரமயான ஒரு ஊர் கோவை. கோவை மாநகரம் பெங்களூர் போல காலநிலை கொண்ட அருமையான நகரம் ஆகும். ஏனெனில் கோவையில் வடகிழக்கு, தென்மேற்கு என இரு பருவமழையும் அருமையாக இருக்கும். இதேபோல் கோடை மழையும் ஒவ்வொரு ஆண்டும் பெய்யும். இதனால் கோவை மாநகரம் எப்போதுமே குளுகுளுவென இருக்கும். அதேநேரம் வேலூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், உள்ளிட்ட வட மாவட்டங்களில் பிப்ரவரி பிற்பாதியிலேயே கோடைக்காலம் ஆரம்பிக்கும் என்றால், கோவையில் மார்ச் மாதம் தான் கோடைக்காலத்தை உணர முடியும். ஆனால் இந்த முறை அப்படியில்லை.. பிப்ரவரி மாதமே வெயில் கடுமையாக இருக்கிறது. அவினாசி முதல் கோவை வரையில் 37 கிலோ மீட்டருக்கு இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் கோவை முதல் உடுமலை வரை இருந்த பல ஆயிரம் மரங்கள், நான்கு வழிச்சாலைகளால் மாயமானது. அதேபோல் கோவை மாநகரும் சாலை விரிவாக்கம், மேம்பால பணி, புறவழிச்சாலை என பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளால் மரங்களை இழந்தது..இதனால் காலநிலையும் இப்போது அடியோடு மாறிவிட்டது.
இதன் காரணமாக பிப்ரவரி மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது, பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. வெளியில் சென்றாலே வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். இரவில் வெப்பம் அதிக அளவில் இருப்பதால் வீடுகளில் பொதுமக்கள் கதவு, ஜன்னலை திறந்து வைத்தாலும் தாங்க முடியாத அளவிற்கு நிலைமை உள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் இளநீர், நுங்கு, பதநீர், சர்பத், மோர், தர்பூசணி, பழச்சாறு போன்ற குளிர்ந்த பானங்களை பருகி வருகிறார்கள். இதனால் கோவை மாநகரம் முழுவதும் சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அதிகமாக உள்ளன. பொதுமக்கள் இளநீரை அதிகமாக சாப்பிட விரும்புவதால் விலை அதிகமாக உள்ளது.
கடுமையான வெயில் மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக இளநீர் விலை ‘கிடு கிடு’ வென உயர்ந்து உள்ளது. வழக்கமாக ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனையான சாதாரண இளநீர் ஒன்று கோவை மாநகரில் தற்போது ரூ.50-க்கு விற்பனையாகிறது. இதுபோன்று ரூ.45-க்கு விற்பனையான சிவப்பு இளநீர் ஒன்று ரூ.55-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு அதிகமாக இருந்தாலும் வெப்பத்தை தணிக்க கோவை பொதுமக்கள் இளநீரை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பொள்ளாச்சி பக்கத்தில் உள்ள கோவையிலேயே இளநீர் இப்படி விலை உயர்ந்துள்ளது என்றால் சென்னையில் எல்லாம் கேட்கவே வேண்டாம்.. சிறு இளநீர் கூட 50 ரூபாய் என்றும் பெரிய இளநீர் 70 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. இளநீர் மட்டுமல்ல தேங்காய் விலையும் அதிகமாக உள்ளது.
Leave a Reply