திருப்பூர் திருமூர்த்தி மலையில் புதிய சாலை அமைக்கும் திட்டம்.. உடனே நிறுத்த தமிழக அரசு முடிவு

திருப்பூர் : ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியில், திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு 49 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, பதில் அளித்த தமிழக அரசு, ஆனைமலை புலிகள் காப்பகம் வழியாக புதிய சாலை அமைக்கும் பணிகள் உடனடியாக நிறுத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருக்கிறது.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியில், திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு 49 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த சாலையை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று திருப்பூரைச் சேர்ந்த கெளதம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.

திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு சாலை அமைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறுகையில், “ஏற்கனவே இப்பகுதியில் கான்கிரீட் சாலை உள்ள நிலையில் புதிய சாலை அமைக்க அனுமதித்தால், விலங்குகள் வேட்டையாடப்படவும், மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படவும் வாய்ப்பாக அமைந்துவிடும். வாகனப் போக்குவரத்து அதிகரித்து, உணவு தேடிச் செல்லும் விலங்குகளின் உயிருக்கும் ஆபத்தாகும். அத்துடன் புதிய சாலையால் நீர் வழித்தடங்களில் மாற்றம் ஏற்பட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிக்கும் ஏற்படும்.. எனவே புதிய சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர் ஶ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “புதிதாக அமைக்கப்பட உள்ள சாலை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் குறிப்பிடத்தக்க அச்சத்தை ஏற்படுத்தும்” என வனத்துறை அதிகாரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது சம்பந்தமாக விளக்கமளிக்க தமிழக அரசுத் தரப்பில் அவகாசம் கேட்ட போது, ‘குறிப்பிட்ட அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கிவிட்டன.’ என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, சாலைப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி அறிவுறுத்துவதாக அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 27 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள்.