காரமடை தேர் திருவிழா: கோவை-மேட்டுப்பாளையத்தில் இந்த வழியா மட்டும் போயிடாதீங்க.. போக்குவரத்து மாற்றம்

கோவை: கோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் (மார்ச் 12, 13) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இக்கோயிலுக்கு வருகை தருவது வழக்கம். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த தேர்த் திருவிழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் கலந்துகொள்வார்கள்.


நடப்பு ஆண்டில் காரமடை அரங்கநாத சுவாமி கோயிலின் மாசி மக தேர்த் திருவிழா மார்ச் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. தேர் திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பக்தர்கள் எளிமையாக வந்து செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 80 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டத்தினை முன்னிட்டு இன்று முதல் 2 நாட்கள் (மார்ச் 12, 13) ஆகிய தேதிகளில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகள் என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம். 1) கோவை டூ மேட்டுப்பாளையம் செல்லும் லாரிகள், பஸ்கள் மற்றும் கார்கள் அனைத்தும் கோட்டைப்பிரிவு கடந்து சக்தி பொறியியல் கல்லூரி வளைவில் இடது புறம் திரும்பி P.G. புதூர், திம்மம்பாளையம் மற்றும் தோலம்பாளையம் ரயில்வே கேட்டில் இடதுபுறம் திரும்பி மங்களக்கரை புதூர் வழியாக டீச்சர்ஸ் காலனி சென்று மேட்டுபாளையம் செல்ல வேண்டும்.

2) மேட்டுப்பாளையம் டூ கோவை செல்லும் வாகனங்கள் காந்திநகர் அருகே இடதுபுறம் திரும்பி தொட்டிபாளையம், கண்ணார்ப்பாளையம், களத்தியூர் ரயில்வே கீழ் பாலம் வழியாக கோட்டை பிரிவு சென்று கோவை செல்ல வேண்டும். 3) கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து கண்டெய்னர் லாரிகளும் கோட்டை பிரிவு, களத்தியூர் ரயில்வே கேட், கண்ணார்பாளையம் நான்கு வழி சந்திப்பு, தென்திருப்பதி நால்ரோடு வழியாக மேட்டுபாளையம் செல்ல வேண்டும். 4) மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் அனைத்து கண்டெய்னர் லாரிகளும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலை வழியாக, தென்திருப்பதி நால்ரோடு சென்று வலது புறம் திரும்பி கண்ணார்பாளையம், களத்தியூர் ரயில்வே பாலம் வழியாக கோவை செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.