எட்டு மாவட்ட கிராமங்களில் 2,708 குடிநீராதாரங்கள் தரமற்றவை; 60,433 குடிநீர் மாதிரிகள் ஆய்வு

கோவை; கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட, எட்டு மாவட்டங்களில் கடந்த, ஓராண்டில், 60,433 குடிநீர் மாதிரிகள் கிராமப்புறங்களில் சேகரிக்கப்பட்டன. இதில், 2,708 மாதிரிகள் எடுக்கப்பட்ட நீர் ஆதாரங்கள், குடிக்க தகுதியற்றதாக நீர்பகுப்பாய்வு துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், நீர்பகுப்பாய்வுத்துறையின் கீழ், ஆண்டு முழுவதும், அனைத்து குடிநீர் ஆதாரங்களிலும் நீர் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்யப்படுகிறது. குடிநீர் வாயிலாக ஏற்படும் நோய்களை தடுக்கும் வகையில், இப்பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

Latest Tamil News

பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி, கிணறு, ஆறு, குளம், குட்டை என அனைத்திலும் மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
அதன்படி, 2024 ஜன., முதல் டிச., வரை, கோவை நீலகிரி, திருப்பூர், நாமக்கல்,சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களில், 60,433 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.இதில், 2,708 மாதிரிகள் எடுக்கப்பட்ட நீர் ஆதாரங்கள், குடிநீராக பயன்படுத்த தகுதியற்றது எனவும்; மாற்று நீர் ஆதாரத்தை தயார் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, கோவை மண்டல தலைமை நீர்பகுப்பாய்வாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:

2024ல் 12,097 கிராமங்களில் மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளில், 2,708 இடங்களில் சேகரிக்கப்பட்ட குடிநீர், தகுதியற்றது என்பது தெரியவந்தது. 2025 ஜன., பிப்., மாதத்தில் கிராமங்களில், 7,236 மாதிரிகள் எடுக்கப்பட்டதில், 496 குடிநீர் ஆதாரத்தில் கெமிக்கல் அதிகம் கலந்துள்ளதால், தகுதியற்றது என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தொடர் ஆய்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளில், குடிநீரால் பரவும் நோய் பாதிப்புகள் குறைந்துள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.

 

கோவையில் நீரின் தரம் எப்படி?

கோவை மாவட்டத்தில், 2024ல் 1,411 கிராமங்களில் இருந்து 5,643 குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன. ரசாயன பகுப்பாய்வின் படி இதில் 64 நீர் ஆதாரங்கள் குடிநீர் வினியோகத்திற்கு தகுதியற்றதாக தெரியவந்துள்ளது. தவிர, உரிய முறையில் துாய்மைப்பணிகள் மேற்கொண்ட பின்னர் பயன்படுத்தலாம் என்ற பிரிவில், 82 நீர் ஆதாரங்களும் இடம் பெற்றுள்ளன. இப்பட்டியலில், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பல நீர் ஆதாரங்கள் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளன.