கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை!

கோவை: கோவையில் உள்ள வஉசி மைதானத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கோவை மாவட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சொக்கலிங்கம். இவருக்கு வயது 54. இவர் கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றி வந்தார்.இதற்கிடையே இவர் நேற்றிரவு கோவை வஉசி மைதானத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அங்குள்ள மரத்தில் சொக்கலிங்கம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

என்ன நடந்தது:

நேற்றிரவு கோவையில் பீட் காவலர் குமரேசன் என்பவர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் வஉசி மைதானம் பக்கம் சென்ற போது, அங்குள்ள மரத்தில் தூக்கிட்டுத் தொங்கியபடி ஆண் சடலம் இருந்ததைப் பார்த்துள்ளார். சேலையில் தூக்கிடப்பட்ட அந்த ஆண் சடலம் இருந்த நிலையில், அவர் உடனடியாக இது தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரேஸ் கோர்ஸ் போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சொக்கலிங்கம் திடீரென தற்கொலை செய்ய என்ன காரணம் என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட 54 வயதான சொக்கலிங்கம் என்பதும் அவர் கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் 1997ஆம் ஆண்டு காவல் பணியில் இணைந்தார்.கடந்த ஆகஸ்ட் மாதம் தான் இவர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு வேலை செய்து வந்த இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இவரது தற்கொலைக்கு உண்மையில் என்ன காரணம் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடர்கிறார்கள்.

தற்கொலை தீர்வு இல்லை:

தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.