கோடியில் சொத்து.. சார்பதிவாளர் திண்டுக்கல் சாந்திக்கு சிக்கல்.. மகன், மருமகள் மீதும் கோவை போலீஸ் வழக்கு

கோவை: திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவர் திண்டுக்கல் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டில் சார்பதிவாளராக பதவி உயர்வு பெற்ற நிலையில் தஞ்சாவூர், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் சார்பதிவாளராக பணியாற்றினார். சாந்தி மேட்டுப்பாளையத்தில் சார்பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றியபோது அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்திருப்பதாக கருதினால் தாராளமாக புகார் அளிக்கலாம்.. அப்படி புகார் அளித்தால் அதன் உண்மை தன்மையை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிப்பார்கள். தகுந்த ஆதாரங்கள் இருந்தால் குறிப்பிட்ட அரசு ஊழியர் மீது வழக்கு பதிவும் செய்வார்கள். இறுதியில் கைது செய்து நடவடிக்கையும் எடுப்பார்கள். அவ்வப்போது சார் பதிவாளர்கள், விஏஓ, சர்வேயர், தாசில்தார் உள்பட பலர் மீது புகார் வரும். அப்படி புகார் அளிக்கப்பட்ட ஒருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மேட்டுபட்டியை சேர்ந்த சாந்தி என்பவர் கடந்த 2000-ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் 18 வருடங்களில் படிப்படியாக பதவி உயர்வு பெற்று கடந்த 2018-ம் ஆண்டில் சார்பதிவாளராக பதவி உயர்வு பெற்றார் சாந்தி. இதனால் சாந்தி தஞ்சாவூர், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் சார்பதிவாளராக பணியாற்றினார். தற்போது அவர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மாவட்ட உதவி சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சாந்தி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சார்பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றிய போது அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள்.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சாந்தி சார்பதிவாளராக பணியாற்றிய தஞ்சாவூர், சத்தியமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சார்பதிவாளர் சாந்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக புகாருக்கு முகாந்திரம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் சாந்தி, அவருடைய மகன் ராஜேஷ், மருமகள் பிரபிஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், சார்பதிவாளர் சாந்தி கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை உள்ள காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 52 லட்சத்து 12 ஆயிரத்து 380-க்கு சொத்து சேர்த்தாக தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. பின்னர் அவர் தனது மகன் மற்றும் மருமகள் பெயரில் சொத்துக்களை வாங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. எனவே சாந்தி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வேடசந்தூர் அருகே உள்ள சாந்தியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அதில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.. அதை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.