கோவை: கோவை-அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1,621 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பவன்குமார், மேம்பாலம் கட்டும் பணி 92 சதவீதம் நிறைவு பெற்று உள்ளதாக தெரிவித்தார்.
கேரளாவின் நுழைவு வாயிலாக உள்ள கோவை மாநகரம், திருச்சி, பாலாக்காடு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், சத்தியமங்கலம் என பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து இணைப்பு சாலைகளை கொண்டுள்ளது. எனினும் சென்னையில் உள்ள அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை போல், கோவையில் உள்ள மிகவும் முக்கியமான சாலை என்றால் அது அவினாசி சாலை தான்..
ஏனெனில் அவினாசி சாலையில் தான் விமான நிலையம் அமைந்துள்ளது. பல்வேறு மிகப்பெரிய முக்கிய நிறுவனங்கங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி சென்னை, பெங்களூரு, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கோவை மாநகரை அடைவதற்கு அவிநாசி சாலை தான் முக்கியமான சாலையாகும். அவினாசி சாலையில் கருமத்தம்பட்டி வரை நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏராளமான பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், அரசு, தனியார் நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள் கிட்டத்தட்ட நீலாம்பூர், கனியூர் தாண்டி, கருமத்தப்பட்டி வரை இருக்கின்றன. இதில் நீலாம்பூர் வரை எப்போதோ கோவை மாநகரத்தின் அங்கமான பகுதிகளாகிவிட்டன. இந்த பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கடந்த 2010-ம் ஆண்டு இச்சாலை 6 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1,621.30 கோடி கோடி மதிப்பில் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியிருந்தது. பணிகள் ஐந்து ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் இதற்காக 300 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மேம்பாலத்தில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக ஹோப் காலேஜ், நவ இந்தியா, அண்ணா சிலை, விமான நிலையம் ஆகிய 4 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மேம்பால கட்டுமான பணி முடிவடைந்தால், அவினாசி சாலையில் வாகன நெரிசலுக்கு தீர்வு வந்துவிடும். இந்த மேம்பால கட்டுமான பணியினை கலெக்டர் பவன்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கு பின்னர் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் கூறுகையில், “கோவை மாவட்டம் அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், இந்த உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த சாலையின் இருபுறமும் 1.5 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேம்பாலம் கட்டும் பணி 92 சதவீதம் நிறைவடைந்திருக்கிது.. மீதம் உள்ள பணிகளை விரைந்து முடித்து பணிக்கு கொண்டு வர நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்று கூறினார். இது ஒருபுறம் எனில், மக்களின் கோரிக்கையை ஏற்று கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து நீலாம்பூர் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோல்டுவின்ஸ் பகுதியில் இறங்கி சில மீட்டர் தொலைவில் மீண்டும் மேம்பாலத்தில் ஏறிச்செல்லும் வகையில் திட்டமிட்டு பணிகள் தொடங்கி உள்ளது. சுமார் 800 கோடி செலவில் நடைபெற உள்ள இந்த பணிகள் முடிந்தால் கோவை மாநகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்துவிடும்.
Leave a Reply