கோவை: கோவை – பாலக்காடு சாலையில் ரயில்வே பாலம் கட்டுமான பணி நடைபெறுவதால் இன்று முதல் (மார்ச் 14) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது
கோவையில் கல்வி, மருத்துவம், தொழில், வியாபாரம், வேலை, ஐடி துறை உள்ளிட்ட பணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், அண்டை மாநிலமான கேரளத்தைச் சேர்ந்த மக்களும் இங்கு வந்து செல்கின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் கோவை – பாலக்காடு சாலையைப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கோவை – பாலக்காடு சாலையில் மரப்பாலம் பகுதியில் ரயில்வே பாலம் ஒன்று உள்ளது. இந்தப் பாலம் மிகவும் குறுகலாக இருப்பதால் ஒரு நேரத்தில் ஒரு வழியாக வரும் வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். குறிப்பாக ஒரு நேரத்தில் ஒரு பேருந்து மட்டும் செல்லும் அளவுக்கு அந்த சாலை குறுகலாக இருக்கும். இதனால், எதிர்திசையில் இருந்து வாகனங்கள் பாலத்தை கடக்க காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால், எப்போதும் இந்த சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை பார்க்க முடியும். போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் சில சமயங்களில் ஆம்புலன்ஸ் கூட சிக்கித் தவிக்கும் சூழல் ஏற்படும். இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, இப்பகுதியில் உள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
அந்த வகையில், இந்தப் பாலம் 18 மீட்டர் அகலம், 5.7 மீட்டர் உயரத்துடன் 4 வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, மக்களும் சிரமமின்றி செல்லலாம். பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக 3 மீட்டர் அகல நடைபாதையும் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ. 34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்வே பால பணி காரணமாக மரப்பாலம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவை – பாலக்காடு சாலையில் மதுக்கரையை அடுத்துள்ள மரப்பாலம் அகலப்படுத்தும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெறுகிறது. இதனால் கோவையில் இருந்து க.க.சாவடி, வாளையாறு முதல் இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி கோவையில் இருந்து க.க.சாவடி, வாளையாறு மற்றும் பாலக்காடு செல்லும் பஸ் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் மதுக்கரை சந்திப்பில் இடது புறம் திரும்பி குவாரி ஆபீஸ் சாலை, குரும்பபாளையம் சாலை, மதுக்கரை மார்க்கெட் சாலை, செட்டிபாளையம் சாலை வழியாக செட்டிபாளையம் பிரிவுக்கு செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் மேற்படி சாலையில் செல்ல அனுமதி இல்லை. மேலும் வாளையாறு மற்றும் பாலக்காட்டில் இருந்து, கோவை, குனியமுத்தூர், உக்கடம் செல்லும் பஸ்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் செட்டிபாளையம் பிரிவு, விறகுக்கடை பாலம் வழியாக சென்று சிமெண்ட் பேக்டரி சாலை வழியாக செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் மேற்படி சாலையில் செல்ல அனுமதி இல்லை.
மேலும் கோவையில் இருந்து க.க.சாவடி, வாளையாறு மற்றும் பாலக்காடு செல்லும் கனரக வாகனங்கள் ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி குறிச்சி, ஈச்சனாரி சாலை வழியாக சென்று சேலம்-கொச்சின் சாலையில் கற்பகம் கல்லூரி சந்திப்பில் வலது புறம் திரும்பி செல்ல வேண்டும். மேலும் வாளையாறு மற்றும் பாலக்காட்டிலிருந்து கோவைக்கு வரும் கனரக வாகனங்கள் கற்பகம் கல்லூரி-பொள்ளாச்சி சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி ஈச்சனாரி, குறிச்சி சாலை வழியாக ஆத்துபாலம் சந்திப்புக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply