கோவை; கோவை – அவிநாசி ரோட்டில், 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டும் பகுதியில், 16 இடங்களில், ‘யூ டேர்ன்’ வசதி செய்திருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். எந்தவொரு இடத்திலும் அறிவிப்பு பலகைகள் இல்லாததால், வெளியூர்களில் இருந்து கார்களில் வருவோர் குழப்பம் அடைகின்றனர். தேவையான இடங்களில், பாதசாரிகள் கடக்க இடைவெளி இல்லாததால், அவதிப்படுகின்றனர்.
கோவை – அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. ஹோப் காலேஜில், 52 மீட்டர் நீளத்துக்கு இரும்பு கர்டர் அமைக்க வேண்டிய பணி நிலுவையில் உள்ளது. இங்கு, மூன்று துாண்களுக்கு இடையே ‘டெக்’ அமைக்க வேண்டும். தலா நான்கு இடங்களில் ஏறு தளங்கள், இறங்கு தளங்கள் அமைக்க வேண்டும்.அனைத்து வேலைகளையும் ஜூன் இரண்டாவது வாரத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.சாலை மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் வசதிக்காக, தானியங்கி சிக்னல் முறை அகற்றப்பட்டு, ‘யூ டேர்ன்’ வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இது, வாகனங்கள் தேங்காமலும், எவ்விடத்திலும் காத்திருக்காமலும் செல்வதற்கு வசதியாக இருக்கிறது. மொத்தம், 16 இடங்களில், ‘யூ டேர்ன்’ வசதி செய்யப்பட்டுள்ளது.இப்பகுதியில் திரும்பும்போது வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ‘யூ டேர்ன்’ பகுதியில் எந்தவொரு இடத்திலும் அறிவிப்பு பலகைகள் இல்லை. வெளியூரில் இருந்து கார்களில் வருவோர் தடுமாற்றம் அடைகின்றனர்.
கே.எம்.சி.ஹெச்., பகுதியில் மருத்துவமனை பகுதியில் இரு இடங்கள், சற்றுத்தள்ளி சிட்கோ தொழிற்பேட்டை, காளப்பட்டி ரோட்டில் வருவோருக்காக ஓரிடம், சிட்ரா ஆகிய ஐந்து இடங்களில் ‘யூ டேர்ன்’ அமைக்கப்பட்டிருக்கிறது. கார்கள், கனரக வாகனங்கள், பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரும்பும்போது, மற்ற வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
உப்பிலிபாளையத்தில் இருந்து வருவோர், குப்புசாமி நாயுடு மருத்துவமனை வழியாக வருவோர், பாப்பநாயக்கன்பாளையம் வழியாக வருவோர் என மூன்று வழியாக வாகனங்களில் வருவோர் லட்சுமி மில்ஸ் சந்திப்பை கடந்து, ‘யூ டேர்ன்’ பகுதியில் திரும்புகின்றனர். அச்சமயம் எதிர்திசையில் வரும் வாகனங்களால் திணறல் ஏற்பட்டு, போக்குவரத்து நெருக்கடி உருவாகிறது.
இவ்வழித்தடத்தில், தலா, 11 இடங்களில், பஸ் ஸ்டாப்கள் இருக்கின்றன. மருத்துவமனைகள், கல்லுாரிகள் அதிகமாக உள்ளன. கல்லுாரி மாணவ, மாணவியர், பாதசாரிகள், பயணிகள் எதிர்திசைக்குச் செல்ல, ரோட்டை கடக்க முடியாமல் தடுமாறுகின்றனர். வாகனங்கள் தொடர்ச்சியாக வேகமாக செல்வதால் முதியவர்கள் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர்.
மாநில நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டபோது, ‘யூ டேர்ன் அதிகமாக இருக்கிறது. தற்போது ரோடு போடும் பணி நடக்கிறது; ஏப்., இரண்டாவது வாரத்துக்குள் முடிந்து விடும். போக்குவரத்து போலீசார், சாலை பாதுகாப்பு பிரிவினருடன் இணைந்து மீண்டும் கூட்டாய்வு செய்யப்படும். ‘யூ டேர்ன்’ தேவையா, தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டுமா என முடிவெடுக்கப்படும். பாதசாரிகள் ரோட்டை கடக்க தேவையான வசதிகள் இனி செய்யப்படும்’ என்றனர்.
Leave a Reply