தொண்டாமுத்தூர்: பேரூரில், கொங்கு மண்டல சித்தாந்த சைவ ஆகம சபை சார்பில் நடந்த, சித்தாந்த சைவ ஆகம மாநாட்டில், கோவில்களில் கடைபிடிக்கப்படும் ஆகம மரபு பூஜைகளில், அறநிலையத்துறை தலையிடக்கூடாது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கொங்கு மண்டல சித்தாந்த சைவ ஆகம சபை சார்பில், சித்தாந்த சைவ ஆகம மாநாடு, பேரூரில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டிற்கு, கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ராஜலிங்க சரவண மாணிக்கவாசகர் சுவாமிகள் தலைமை வகித்தார். மருதுறை குருக்கள்பாளையம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஆலால சுந்தர பண்டித குரு சுவாமிகள், பெங்களூர் ஸ்ரீ ஸ்ரீ குருகுலம் வேத ஆகம சமஸ்கிருத மஹா பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.
சித்தாந்த சைவ சமயத்திற்கும், கோவில்களில் ஆகம மரபு நெறிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் இடையூறுகளை நீக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
இம்மாநாட்டில், ஆகம மரபு பூஜைகளில், அறநிலையத்துறை தலையிடக்கூடாது. கோவில்களை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், பேரூர் சிவாச்சாரியார்கள், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் சைவ அடியார்கள் கலந்து கொண்டனர்.கொங்கு மண்டல சித்தாந்த சைவ ஆகம சபையின் கவுரவ ஆலோசகர் சூரிய கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,மாநாட்டில், சமீபகாலமாக, சிவாச்சாரியார்களுக்கு ஏற்பட்டு வரும் சிக்கல்கள், இனி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சமீப காலமாக, அரசியல் தூண்டுதல்களால், தமிழில் குடமுழுக்கு என, கூறி வருகின்றனர். கோவிலில், அரசியல் தலையீடு இருக்க கூடாது,என்றார்.
Leave a Reply