கோவை விமான நிலைய முனையம் அற்புதமாக மாறுது.. இந்திய விமான நிலைய ஆணையம் சூப்பர் முடிவு

கோவை: கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, ஐதராபாத், புனே, சீரடி, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், அபுதாபி, சார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் சென்று வருகின்றன. தினசரி 10 ஆயிரம் பயணிகள் கோவை விமான நிலையத்தின் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள்.. பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயருவதால், கோவை விமான நிலையத்தின் முனைய கட்டிடம் ரூ.68 லட்சத்தில் மாற்றியமைக்கப்பட உள்ளது.

தமிழநாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் கோவை மாநகரம் வளரும் வேகத்திற்கு ஏற்ப கோவை விமான நிலையம் இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால் பெரிய விமானங்கள் மற்றும் பன்னாட்டு விமானங்கள் அதிக அளவில் வந்து செல்ல முடியாத நிலையே இருக்கிறது. பலரும் கொச்சி வந்து அதன்பிறகு கோவை வரும் நிலை இருக்கிறது.. இல்லை என்றால் நேரடியாக சென்னை வந்து அதன்பின்னர் கோவை வரும் நிலை இருக்கிறது.

தற்போதைய நிலையில் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், ஷீரடி உள்ளிட்ட நகரங்களுக்கும், அபுதாபி, சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் உள்நாட்டிற்குள் 29 விமானங்களும், வெளிநாடுகளுக்கு 4 விமானங்களும் இயக்கப்படுகிறது.கோவை விமான நிலையத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டு காலக்கட்டத்தில் 10 லட்சத்து 92 ஆயிரத்து 721 பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். அந்த காலக்கட்டத்தில் 6,780 மெட்ரிக் டன் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஆண்டில், அதாவது கடந்த 2022-ம் ஆண்டு 20 லட்சத்து 84 ஆயிரத்து 783 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். அப்போது 8,530 மெட்ரிக் டன் சரக்குகள் அனுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல் கடந்த 2023-ம் ஆண்டில் மொத்தம் 26 லட்சத்து 37 ஆயிரத்து 143 பயணிகள் பயணம் செய்திருந்தனர்.

Coimbatore Airport

6,843 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கோவை விமான நிலையத்தில் 27 லட்சத்து 71 ஆயிரத்து 272 பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். அத்துடன் 10,571 மெட்ரிக் டன் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. இதை பார்க்கும் போது பயணிகள் எண்ணிக்கையும் சரி சரக்குகளை கையாளுவதிலும் சரி கோவை விமான நிலையம் வேகமாக முன்னேறி வருகிறது.

அதேபோல் கடந்த 4 ஆண்டுகளாக பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. 2021ல் 10 லட்சம் என்று இருந்த பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 27 லட்சம் எனகிற அளவில் உயர்ந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை விரைவில் 50 லட்சம் என்கிற அளவில் உயர வாய்ப்பு உள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதை உடனே மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை கோவை மக்களிடையே வலுத்து வந்தது.

தற்போதைய நிலையில் கோவை சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கம் என்பது கோவை மாநகரம் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிகப் பெரிய பயனுள்ள திட்டமாக இருக்கிறது. இதற்காக பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு சுமார் 470 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. அதில் பணிகளை விமான நிலைய ஆணையம் மேற்கொள்ள தொடங்கி உள்ளது.இதனிடையே கோவை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உள்பகுதியில் காத்திருப்போர் பகுதியில் போதிய இட வசதியின்றி பயணிகள் சிலர் நிற்கும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே விமான நிலைய முனையத்தை விரிவுப்படுத்தி மாற்றி மறுசீரமைக்க விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்பந்தபுள்ளி (டெண்டர்) கோரியிருக்கிறது. கோவை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் இடம் மற்றும் பயணிகள் காத்திருக்கும் பகுதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக விமான நிலைய ஆணையத்தின் இணையதள பக்கம் மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க முடியும். ஏப்ரல் 2-ந் தேதி மாலை 6 மணியுடன் விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நிறைவடைகிறது என்றும், இந்த பணிகள் ரூ.68 லட்சம் செலவில் 9 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.