கோவை: காந்திபுரத்தில் உள்ள டவுன் பஸ் ஸ்டாண்ட்இரு சக்கரவாகன நிறுத்துமிடத்தில், நாளொன்றுக்கு, 40 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிக தொகை என்பதால், வாகன ஓட்டிகளுக்கும், ஸ்டாண்ட்டில் இருப்பவர்களுக்கும் இடையே, தினமும் வாக்குவாதம் ஏற்படுகிறது.கோவை, காந்திபுரத்தில் டவுன் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், மாநகராட்சியின் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் செயல்படுகிறது. ஆறு மணி நேரத்துக்கு, 5 ரூபாய், 12 மணி நேரத்துக்கு 10 ரூபாய், 24 மணி நேரத்துக்கு 20 ரூபாய் வசூலிக்கப்பட்டது.கடந்தாண்டு ஏப்., 1 முதல் கட்டண விகிதம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, இரண்டு மணி நேரத்துக்கு, 10 ரூபாய், அதன் பின், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா, 5 ரூபாய் வீதம் வசூலிக்க மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாகனஓட்டிகள் அதிர்ச்சி
இக்கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு கொண்டு சென்றதும், உயர்த்தப்பட்ட கட்டண விகிதங்களை நிறுத்தி வைக்க, வாய்மொழியாக அறிவுறுத்தினார் .அதற்கு பதிலாக, 12 மணி நேரத்துக்கு, 20 ரூபாய் வீதம் நாளொன்றுக்கு, 40 ரூபாய் வசூலிக்கின்றனர். வாகனத்தை எடுக்க வரும்போது, நாள் கணக்கில் கணக்கிட்டு பணம் வாங்குகின்றனர்.
அறிவிப்பு பலகை ‘அம்போ’
நாட்களை கணக்கிடும்போது முறைகேடு செய்கின்றனர். இரவு, 12:00 மணி வரை ஒரு நாளாகவும், இரவு, 12:00 மணிக்கு பின், இன்னொரு நாளாகவும் கணக்கிட்டு, ஒவ்வொரு வாகனத்துக்கும் கூடுதலாக ஒரு நாள் வாடகை சேர்த்து வசூலிக்கின்றனர்.
வாகனம் நிறுத்துமிடத்தில் கட்டண விகிதங்கள் தொடர்பாக, அறிவிப்பு பலகையில் தொகை குறிப்பிட்டிருக்கும் பகுதி கிழிக்கப்பட்டு இருக்கிறது. அதனால், ஸ்டாண்ட்டில் இருப்போருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே, தினமும் வாக்குவாதம் ஏற்படுகிறது.கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய, மாநகராட்சி மத்திய மண்டல அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
Leave a Reply