சென்னை: உரிய அனுமதியின்றி நடைபெறும் போராட்டங்கள் அவ்வப்போது நடக்கிறது. இதற்கிடையே அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்குச் சுமை ஏற்படுத்துவதை விடுத்து உடனடி அபராதம் விதிக்கலாமே என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு யோசனை தெரிவித்துள்ளது.
பொதுவாகப் போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது முன்கூட்டியே அது தொடர்பாக போலீசாரிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். போலீசார் அந்த கோரிக்கையைப் பரிசீலனை செய்து சட்ட ஒழுங்கிற்குப் பிரச்சினை ஏற்படாத வகையில் அனுமதி கொடுப்பார்கள். சில நேரங்களில் அனுமதி மறுக்கப்படும்.
ஆனால், அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை போலீசார் அனுமதி கொடுக்கவில்லை என்றாலும் கூட அதை மீறி போராட்டம் நடத்துவார்கள். இதுபோல போலீசார் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்துவது அவ்வப்போது நடைபெறுகிறது. இதுபோன்ற சூழல்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அது சிக்கலாகவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையே இது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட் முக்கிய யோசனை ஒன்றைத் தெரிவித்துள்ளது.
அதாவது இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலையைக் கண்டித்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் கடந்த 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில் அரியலூரில் ரயில் மறியலில் ஈடுபட்டதாக அமைச்சர் சிவசங்கரன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, அமைச்சர் சிவசங்கரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தி உள்ளதாகக் கூறி இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார். முன்னதாக வழக்கு விசாரணையின் போது நீதிபதி, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்திற்குச் சுமை ஏற்படுத்துவதற்குப் பதில் உடனடி அபராதம் விதிக்கலாமே என அரசு யோசனை தெரிவித்தார்.
Leave a Reply