கோவை : வ.உ.சி., உயிரியல் பூங்கா இடத்தில் பறவைகள் பூங்கா அமைக்க, ரூ.9.89 கோடிக்கு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.கோவை வ.உ.சி.உயிரியல் பூங்காவில், 1970ல் சிங்கம், புலி, கரடி போன்ற வன விலங்குகள் பராமரிக்கப்பட்டன. மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், உயிரியல் பூங்காக்களுக்கு அங்கீகாரம் வழங்குவதுடன், விதிமுறைகளையும் கடுமையாக்கியது.

அதன்படி, உயிரினங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இடவசதி உள்ளிட்ட அம்சங்கள் பூங்காவில் மேம்படுத்தப்படவில்லை, என ஆய்வு செய்த ஆணைய அதிகாரிகளோ, அங்கீகாரத்தை ரத்து செய்வதாக 2008ம் ஆண்டே எச்சரித்தனர்.
எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 2023ல் பூங்காவுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.வனத்துறையினரின் அறிவுறுத்தலின்படி, பூங்காவில் இருந்த முதலைகள் அமராவதி முதலை பண்ணையிலும், பாம்புகள் கிண்டியில் உள்ள பாம்பு பண்ணையிலும், மான்கள் சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் வனப்பகுதியிலும் விடுவிக்கப்பட்டன.
பூங்கா மூடப்பட்டது. இது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியதால், மாநகராட்சி நிர்வாகம், பூங்கா இருந்த இடத்தில் பறவைகள் பூங்கா அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளது.
அரசு அனுமதி கிடைத்தவுடன், ‘பிபிபி’ எனப்படும் ‘பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்’ மாடலில், இதற்கான பணிகளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ”ரூ.9.89 கோடியில் பறவைகள் பூங்கா அமைக்க, அரசுக்கு கருத்துரு அனுப்பி, அனுமதிக்காக காத்திருக்கிறோம்,” என்றார்.
Leave a Reply