அரசு மருத்துவமனைக்கு போலீஸ் ஸ்டேஷன் அவசியம்! இரு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட முன்மொழிவு

கோவை: சென்னை, சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போலீஸ் ஸ்டேஷன் இருப்பதுபோல், கோவையிலும் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கோவை அரசு மருத்துவமனைக்கு சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் நோயாளிகள் வருகின்றனர்.

சராசரியாக நாளொன்றுக்கு, 5,300 உள்நோயாளிகள், 2000 புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுடன், ஒன்றுக்கு மேற்பட்ட உறவினர்கள் வருவதால், எப்போதும் அனைத்து பிரிவுகளிலும் மக்கள் காணப்படுகின்றனர். தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தால், 120 பேர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இருந்தாலும், மனநலம் சார்ந்த பிரச்னைக்கு சிகிச்சைக்கு வந்த ஒருவர், கழிப்பறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். நோயாளியின் உறவினராக வந்தவர், நரம்பியல் பிரிவில் ஊசி, மருந்துகளை திருடிச் சென்றபோது, செவிலியர்கள் விரட்டிச் சென்று பிடித்து, புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அடுத்தடுத்த இரு நாட்களில் இரு சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்தாண்டு பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் நடந்தது. குடிபோதையில் தகராறு செய்வது, வார்டுக்கே மதுபாட்டில் வாங்கிச் செல்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் அடிக்கடி நடந்து வருகின்றன. அதனால், பாதுகாப்பை பலப்படுத்த, மருத்துவமனை நிர்வாக ரீதியாக கூட்டம் நடத்தி, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என முடிவெடுக்க திட்டமிட்டுள்ளனர்.

மருத்துவமனை வளாகத்துக்குள் புறக்காவல் நிலையம் செயல்படுகிறது; இரு போலீசார் பணிபுரிகின்றனர். நோயாளிகளின் விபரங்களை பதிவேட்டில் பதிவு செய்து, ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லும் வேலையை செய்வதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. மருத்துவமனை வளாகத்துக்குள் ரோந்து செல்ல முடிவதில்லை. சென்னை, சேலம் மருத்துவமனை களில் இருப்பதைபோல், இங்கும் ஒரு போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்கிற முன்மொழிவு மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இரு ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்டு, பரிசீலனையில் இருக்கிறது.

அதன்பின், போலீஸ் கமிஷனரும் மாறி விட்டார்; மருத்துவமனை டீனும் மாறி விட்டார். தற்போது பணியில் உள்ள அதிகாரிகள் அந்த கோப்பை துாசி தட்டி, ஸ்டேஷன் நிறுவுவதோடு, 24 மணி நேரமும் ரோந்து சென்று, கண்காணிக்கும் வகையில் போலீசார் நியமித்தால், திருட்டு, தகராறு மற்றும் வார்டுகளில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கலாம்.