கோவையில் ஹோம் லோன் போட்டு, புதிதாக வீடு கட்டியவருக்கு 4 வருடம் கழித்து ட்விஸ்ட்.. கோர்ட் குட் நியூஸ்

கோவை: வீடு கட்ட போகிறீர்களா..அதற்கு கட்டுமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுகிறீர்களா.. சரியான நேரத்தில் முடித்துக் கொடுக்காமல், நியாயமற்ற காரணங்களை கூறி கூடுதல் பணம் கேட்டு உங்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்குகிறார்களா.. அல்லது தரமற்ற கட்டுமானம் பயன்படுத்தி வீடு கட்டப்படுவதாக நினைக்கிறீர்களா.. இந்த விவாகரத்திற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற முடியும். கோவை சுலூர் பகுதியில் ஒருவருக்கு 4.25 லட்சம் இப்படி கிடைக்க போகிறது.. இதுபற்றி பார்ப்போம்.சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது இன்றைக்கு பலரது கனவு.. ஆனால் சென்னை,கோவை போன்ற பெரிய நகரங்களில் இடம் வாங்கி வீடு கட்டுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.. வீட்டுக்கடன் வாங்கித்தான் பலர் வீடு கட்டுகிறார்கள். ஆனால் அப்படி வீடுகட்டும் போது, இடம் தொடங்கி, கட்டுமானம் வரை பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.. சரியான முறையில் ஒப்பந்தம் போடாமல் போனால் நினைத்து பார்க்க முடியாத சிக்கல்கள் வரலாம்.


அதேபோல் என்ன தான் சரியாக ஒப்பந்தம் போட்டு செய்தாலும் கட்டுமானம் எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் வீட்டு கடன் முடிவதற்கு உள்ளாகவே வீடு தரமற்றதாக மாறிவிடும். அதேநேரம் வீடு கட்டுமானம் தரமற்றதாக இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். அப்படி காவலர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பார்ப்போம். கோவை சூலூர் குமாரபாளையத்தை சேர்ந்த 45 வயதாகும் ஆறுமுகம் என்பவர் மத்திய ஆயுதப்படை போலீஸ் மையத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஆறுமுகம் கூறுகையில், “என்னிடம் கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த குமார் என்பவர் வீட்டு மனையுடன் வீடு கட்டி தருவதாக வாக்குறுதி அளித்தார்.
இதை நம்பிய நான் தனக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று கட்டுமான ஒப்பந்ததாரர் குமாரிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கு 787 சதுர அடி நிலத்தில் வீடு கட்டி கொடுக்க ரூ.26 லட்சம் செலவாகும் என்று என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து, அந்த தொகையை வீட்டு லோன் மூலம் வங்கி கடன் பெற்று அவருக்கு செலுத்தினேன்.

பின்னர் கடந்த 27.1.2021 அன்று கிரகப்பிரவேசம் முடிந்து புதிய வீட்டுக்கு குடியேறினேன். அதன் பின்னர் தான் வீட்டின் கட்டுமான பணி தரமற்ற முறையில் இருந்ததை நான் உணர்ந்தேன். சுவர்களில் விரிசல் ஏற்பட்டதுடன், சிமெண்ட் பூச்சு வேலையும் சரியாக இல்லை என்பதை கண்டேன். இதுகுறித்து கட்டுமான உரிமையாளர் குமாரிடம் முறையிட்டேன்.. ஆனால் அவர் உரிய நிவாரணம் மேற்கொள்ளவில்லை என்று மனுவில் ஆறுமுகம் கூறியிருந்தார். ஆறுமுகத்தின் இந்த மனு மீது விசாரணை நடத்திய கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தங்கவேலு, உறுப்பினர்கள் சுகுணா, மாரிமுத்து ஆகியோர் இழப்பீடாக ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், மன உளைச்சலுக்கு ரூ.50 ஆயிரமும், கோர்ட்டு செலவாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஹோம் லோன் போட்டு வீடு கட்டியபின் சில வருடங்களிலேயே கட்டுமானம் தரமற்றதாக போனால் இதுபோல் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற முடியும். எனினும் வீடு கட்டும் போது இதில் கவனமாக இருப்பதே நல்லது.