அன்னூர்; அன்னூர் கடைவீதியில், 60 அடி சாலை அமைக்க அளவீடு செய்யும் பணி நடந்தது. இதனால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோவை – சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையின் மையமாக அன்னுார் உள்ளது. கோவையிலிருந்து தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி மற்றும் கர்நாடகா செல்கின்றன.இதே போல், அவிநாசி, மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலைக்கும் மையமாக அன்னூர் உள்ளது. சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்திற்கு, தினமும் பல ஆயிரம் வாகனங்கள் அன்னுார் வழியாக செல்கின்றன.

எனினும், அன்னூர் கடைவீதியில் சாலை அகலம் வெறும் 23 அடி அகலம் மட்டுமே உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.
இதற்கு தீர்வாக, கோவை – சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் குரும்பபாளையத்தில் துவங்கி, கர்நாடக எல்லை வரை புறவழிச்சாலை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல், அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு, 38 கி.மீ., தொலைவுக்கு, 238 கோடி ரூபாயில் சாலை அமைக்கும் பணி, கடந்த ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. அவிநாசி – – மேட்டுப்பாளையம் சாலை, 60 அடி சாலையாக தரம் உயர்ந்தாலும், பிரதான கடைவீதியில் 190 மீ., நீளத்துக்கு, 23 அடி சாலையாக உள்ளதால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் தொடரும் என்ற அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில், மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், அன்னுார் பிரதான கடைவீதியிலும் சாலை அகலத்தப்படுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சாலையின் மையத்திலிருந்து இருபுறமும் தலா 10 மீ., அளவுக்கு சாலை அமைக்கப்படும். நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடம் இல்லாத பகுதியில் நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அளவீடு செய்யும் பணி நேற்று முன்தினம் நடந்தது. அவிநாசி சாலையும், சத்தி சாலையும் சந்திக்கும் இடத்தில், மாநில நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தகுமார், உதவி பொறியாளர் சுகுமார் மற்றும் ஊழியர்கள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
‘முதல் கட்டமாக அளவீடு செய்யும் பணி நடைபெறுகிறது. பின்னர் தேவைப்படும் இடத்தில் உரிமையாளர்களுக்கு உரிய நோட்டீஸ் தரப்படும்,’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், ‘பல ஆண்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். பணியை விரைவுபடுத்தி, கையகப்படுத்தும் இடத்தின் உரிமையாளர்களுக்கு சந்தை விலையில் இருந்து இரண்டு மடங்கு தொகை இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றனர்.
Leave a Reply