வாகனம் பதிவு செய்ய ஆதார் தகவல்கள் திருத்தி தில்லுமுல்லு! பிரபல டூவீலர் டீலர் மீது கலெக்டரிடம் பகீர் புகார்

கோவை: கோவையில் போலி ஆதார் அட்டை பயன்படுத்தி வாகனங்கள் பதிவு செய்யும் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரபலமான ஒரு டூவீலர் டீலர் நீண்டகாலமாக இந்த வேலையில் ஈடுபடுவதாக, கலெக்டரிடம் ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனை செய்யும் சில நிறுவனங்கள், கோவையில் வசிக்கும் வெளிமாநில மக்களுக்கு வாகனம் விற்க, ஒரு தந்திரத்தை கையாள்கின்றனர்.

கடந்த ஆண்டுகளில் வாகனம் வாங்கி சென்றவர்கள், ஆர்.டி.ஓ.,விடம் அதை பதிவு செய்வதற்காக கொடுத்த ஆதார் அட்டை காப்பியில் உள்ள முகவரியையும், போட்டோவையும் மென்பொருள் வாயிலாக திருத்தி, அதில் புது வாடிக்கையாளரின் பெயரையும் போட்டோவையும் இணைக்கின்றனர். அதை முகவரி சான்றாக பயன்படுத்தி வாகனத்தை பதிவு செய்கின்றனர்.

வெளிமாநிலத்தவர் தமது ஆதார் கார்டை வைத்து இங்கே வாகனம் பதிவு செய்து வாங்க முடியாது என்பதால் இந்த உத்தி.

விற்பனையை அதிகரிப்பதற்காக டீலரே இந்த வேலைகளை செய்வது உண்டு. சில டீலர்கள் நேரடியாக சம்பந்தப்படாமல், வாடிக்கையாளர்களுக்கு வழி மட்டும் சொல்கின்றனர்.இந்த சட்டவிரோதமான வேலை தொடராமல் இருக்க, பயோமெட்ரிக் முறை அல்லது க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து, புதிய வாகனம் பதிவு செய்ய வேண்டும். அப்போது உண்மையான நபரின் பெயரில் கார் பதிவு செய்ய முடியும், என நேர்மையான டீலர்கள் கூறுகின்றனர்.

மனித நீதி சட்ட உரிமை மற்றும் அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் கார்த்திக், இது குறித்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

மனுவில், ‘கோவையில் பிரபலமான ஒரு டூவீலர் விற்பனை நிறுவனம், சில ஆண்டுகளாக வாகன பதிவில் செய்யும் மோசடி குறித்து, அந்த டீலரிடம் பணிபுரியும் சிலரே எங்கள் தொழிற்சங்கத்துக்கு தெரிவித்து, மோசடிக்கு பயன்படுத்திய போலி ஆதார் அட்டைகளையும் அளித்தனர். அவற்றை தங்களிடம் ஒப்படைக்கிறோம்.

ஆதார் அட்டையை திருத்தி மோசடி செய்யும் டீலர்களிடம் விசாரணை நடத்தி, தண்டிக்க வேண்டும். போலி ஆதார் மூலமாக செய்த வாகன பதிவுகளை ரத்து செய்ய வேண்டும். பயோமெட்ரிக் மற்றும் ‘க்யூஆர்’ ஸ்கேன் செய்து வாகனங்களை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என கார்த்திக் கூறியுள்ளார்.

இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்கும் உத்தரவுப்படி நடவடிக்கை எடுப்போம்,” என்று கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன் கூறினார்.

‘இதுபோன்ற மோசடி, கோவையில் மட்டும் நடந்திருக்க முடியாது. எனவே, மாநிலம் தழுவிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படலாம்’ என, கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.