கோவை; எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில், மூன்று நாட்களாக நடைபெற்று வந்த ‘நவீன தொழில்நுட்பத்தில் வளரும் இந்தியா 2025’ என்ற மாநாடு, நேற்று நிறைவு பெற்றது.
நிறைவு விழாவில், அர்ஜுனா விருது மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற, முன்னாள் இறகுபந்து வீரர் பிரகாஷ் படுகோனே பேசுகையில், ”குழந்தைகள் என்ன விரும்புகிறார்களோ, அதை நிறைவேற்றிக் கொடுப்பது பெற்றோரின் கடமை. அதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். திறமையே ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கு வித்திடும்.

பயிற்சி, செயல் திறன் மதிப்பீடு உட்பட பல துறைகளில் ஏ.ஐ. தாக்கம் அதிகம் இருக்கும்,” என்றார்.
‘ஏ.ஐ. ஒரு கருவி’ ‘நெஸ்லே இந்தியா’வின் முன்னாள் தலைவர் சுரேஷ் நாராயணன் பேசுகையில், ”ஏ.ஐ. ஒரு கருவி. நாம் செயல்படுத்தும் விதத்தை பொறுத்தே, அதன் வளர்ச்சி இருக்கும்.
பழங்காலத்தில் பெயர் பெற்று விளங்கிய சில நிறுவனங்கள், தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, தங்களை மாற்றிக் கொள்ளாததால், நிலைக்க முடியாமல் போய் விட்டது,” என்றார்.
‘ஆசிரியருக்கு நிகரில்லை’ ‘கூகுள்’ கல்விப்பிரிவு தலைவர் சஞ்சய் ஜெயின் பேசுகையில், ”ஏ.ஐ. கல்வித்துறையில் புரட்சியை உருவாக்கும். கூகுள் ஏ.ஐ. மோடு மேம்படுத்தி, படிப்பை எளிதாக்கும் புது அம்சங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
மாணவர்கள் தங்கள் பாடங்களை புரிந்துகொள்ள, ஆராய்ச்சி செய்ய மற்றும் திட்டமிட என, பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாக விளங்கும். ஆனால், ஏ.ஐ. ஒரு போதும், ஒரு ஆசிரியருக்கு நிகராக முடியாது,” என்றார்.
‘ஸ்விக்கி புட் மார்க்கெட் பிளேஸ்’ தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் கபூர், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமங்களின் செயலாளர் மோகன்தாஸ், நிர்வாக அறங்காவலர் மணிமேகலை, கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஸ்ரீஷா, பள்ளி உட்கட்டமைப்பு இயக்குனர் நித்தின் உட்பட பலர் பங்கேற்றனர்.
Leave a Reply