தண்டவாளத்தில் ஏ.ஐ., எச்சரிக்கை அமைப்பு; விரைவில் செயல்பாட்டுக்கு வரும்

காட்டு யானைகள் உட்பட உள்ள வனவிலங்குகள் ரயில் மோதி இறப்பதை தவிர்க்க, மதுக்கரை- கோட்டைக்காடு இடையே, ரயில்வே தண்டவாளங்களில் நிறுவப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) அமைப்பு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என, பாலக்காடு ரயில்வே கோட்டம் மேலாளர் அருண்குமார் சதுர்வேதி தெரிவித்தார்.மதுக்கரை–கோட்டைக்காடு இடையே, ரயில்வே தண்டவாளத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும், சோலார் மின்வேலி மற்றும் காட்டு யானைகள் நடந்து செல்வதற்காக அமைக்க நடைபாதையை, பாலக்காடு ரயில்வே கோட்டம் மேலாளர் அருண்குமார் சதுர்வேதி பார்வையிட்டார்.

இத்திட்டம் குறித்து அவர் கூறியதாவது:
வனவிலங்குகள் ரயில்வே தண்டவாளத்தின் அருகாமையில் வந்தால், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் புகைப்படம் எடுத்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு அமைப்பும். அதன்பின், ரயிலை இயக்கும், ‘லோகோ பைலட்’டிற்கும், ஸ்டேஷன் மாஸ்டருக்கும், கேரளா – -தமிழக வனத்துறை அதிகாரிகளுக்கும் பரிமாறப்படும்.

இத்தகவல் கிடைத்ததும் ‘லோகோ பைலட்’, ரயிலை நிறுத்தவோ அல்லது வேகத்தை குறைக்கவோ முடியும். அதற்குள், வனவிலங்குகளை வனத்திற்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த அமைப்பு, ரூ.15.45 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப உதவியால், இதுவரை எந்த விபத்துகளும் ஏற்படவில்லை. இரவு ரயில்களின் வேகத்தை குறைப்பதற்கும், தண்டவாளங்களுக்கு அருகில் சோலார் விளக்குகள் நிறுவப்படுகின்றன. இத்திட்டங்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும்.

இவ்வாறு, கூறினார்.