இதெல்லாம் தப்புங்க! கனிமவள லாரிகளில் விதிமீறல்கள் அதிகரிப்பு; சாலையில் சிதறும் கற்களால் மக்கள் ஆவேசம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வழியாக, கேரளாவுக்கு கனிமவளங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் விதிமுறைகளை பின்பற்றாமல் எடுத்துச் சென்றதால், ரோட்டில் கற்கள் விழுந்தன. ஆவேசமடைந்த மக்கள், வாகனங்களை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், 60 கிரஷர், குவாரிகள் செயல்படுகின்றன. இங்கு, இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கு உரிய அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும்.

கனிமவளத்துறை அதிகாரிகள் வாயிலாக உரிய அனுமதி கடிதம், குறிப்பிட்ட பாரத்துடன் செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்ற வேண்டும். செமணாம்பதி, கோவிந்தாபுரம், கோபாலபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி, வாளையார் உள்ளிட்ட தமிழக – கேரளா எல்லை சோதனைச்சாவடிகள் வழியாக இந்த லாரிகள் இயக்கப்படுகின்றன.

விதி,138 பி மத்திய மோட்டார் வாகன சட்டம், 2018ன்படி, கனரக வாகனங்கள் பொருட்கள் எடுத்துச் செல்லும் போது, பாதுகாப்பாக மூடி எடுத்துச் செல்ல வேண்டும். திறந்த நிலையில் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.

குறிப்பாக, மணல் போன்ற தளர்வான பொருட்கள் மூடப்பட்டு கொண்டு செல்வது மிக அவசியம்.இது சாலை விபத்துகளை தடுக்க இதுபோன்று விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.இந்த விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால், வாகனங்களுக்கு 20,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என்ற விதிகள் உள்ளன.

ஆனால், இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களில் கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வப்போது ரோடுகளில் சிதறி விழும் கற்களால், விபத்துகள் ஏற்படுகின்றன.இந்நிலையில், பொள்ளாச்சி அருகே எஸ்.நாகூரில் கேரளா மாநிலத்துக்கு கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரிகள் வேகத்தடையை கடந்த போது, சாலையில் கற்கள் சிதறி விழுந்தன.

பெரிய சைஸ் கற்களாக விழுந்ததால், பின்னால் வந்த வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்தனர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள், டிப்பர் லாரிகளை சிறைபிடித்து, வடக்கிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த வடக்கிப்பாளையம் எஸ்.ஐ. குமரேசன், பொள்ளாச்சி தாசில்தார் வாசுதேவன், கிராம நிர்வாக அலுவலர் செல்வம் ஆகியோர் பேச்சு நடத்தினர்.

பொதுமக்கள் கூறுகையில், ‘டிப்பர் லாரிகளில் கற்கள் எடுத்து வரும் போது விதிமுறைகள் பின்பற்றவில்லை. இவ்வாறு கொண்டு செல்லும் போது கற்கள் விழுகின்றன. அந்த கற்கள், பின்னால் வரும் வாகன ஓட்டுநர்கள் மீது விழுந்தால் அசம்பாவிதம் ஏற்படும்.எனவே, விதிமுறைகளை பின்பற்றி எடுத்துச் செல்ல வேண்டும்,’ என்றனர்.

இதையடுத்து, பொதுமக்கள் சிறைபிடித்த, எட்டு டிப்பர் லாரிகள், வடக்கிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டன. தகவல் அறிந்து வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், எட்டு டிப்பர் லாரிகளை தணிக்கை செய்து, அதிக பாரம் ஏற்றி வந்ததாக மொத்தம், 2.48 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என லாரி டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, வாகனங்கள் அபராத தொகை செலுத்தியதால் விடுவிக்கப்பட்டன.

நகரிலும் இதே நிலை!


பொள்ளாச்சி வழியாக, கேரளாவுக்கு ஜல்லி கற்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை பின்பற்றுவதில்லை. மரப்பேட்டை வீதி, தேர்நிலையம், போஸ்ட் ஆபீஸ் மற்றும் ராஜாமில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், ஜல்லிகற்கள், மணல், கழிவு கட்டுமான பொருட்களை சிதறுகின்றன. அந்த லாரிகளை பின்தொடர்ந்து செல்வோர் விபத்துக்குள்ளாவது அடிக்கடி நடக்கிறது. நேற்றுமுன்தினம் பொள்ளாச்சி – பல்லடம் ரோடு தேர்நிலையம் சந்திப்பு அருகே, 200 மீட்டர் துாரத்துக்கு ஜல்லி கற்களை சிதறியதால் வாகன ஓட்டுநர்கள் பாதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கவுன்சிலர் சாந்தலிங்கம், துாய்மை பணியாளர்களுடன் இணைந்து ஜல்லி கற்களை அகற்றி துாய்மைப்படுத்தினார்.