ரமலான் நோன்புக்கு இடையே.. கோவையில் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் நெகிழ வைத்த இஸ்லாமியர்கள்

கோவை: கோவையில் இன்று நடந்த கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் இலவசமாக தண்ணீர் பாட்டில் வழங்கி நெகிழ வைத்தனர்.கோவையில் பிரபலமான கோவில்களில் ஒன்று கோனியம்மன் கோவில். இந்த கோவில் கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா வெகுவிமரிசையாக நடக்கும்.

கோவையின் காவல் தெய்வம் என்று கோனியம்மனை மக்கள் அழைத்து வருகின்றனர். இதனால் திருவிழாவில் கோவை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதி மக்களும் வந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம்.இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கோவிலில் பல்வேறு வாகனங்களில் அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக தேர் வலம் வந்தது.

இந்த தேர் திருவிழாவின்போது இஸ்லாமியர்கள் இந்து பக்தர்களுக்கு இலவசமாக தண்ணீர் பாட்டில்களை வழங்கினர். ஒப்பணக்கார வீதியை கடந்து சென்ற பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து தாகம் தணித்தனர். கையில் தீச்சட்டி ஏந்தி வந்த பக்தர்களின் வாயில் தண்ணீர் கொடுத்து நெகிழ வைத்தனர். இப்போது இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைப்பிடித்து வருகின்றனர். இதனால் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை அவர்கள் உணவு எதுவும் எடுத்து கொள்வது இல்லை. இப்படி நோன்பை கடைப்பிடிக்கும் காலத்திலும் கூட இந்து பக்தர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் இஸ்லாமியர்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சில இடங்களில் மதம் சார்ந்த விஷயங்களை அடிப்படையாக வைத்து இருதரப்பினர் இடையே பிரச்சனை என்பது ஏற்படும். சமீபத்தில் கூட வடமாநிலங்களில் சில இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறின.