கோவை: திருப்பூரைச் சேர்ந்த பெண்கள் இருவர் மகளிர் சுய உதவிக் குழுக்களில் லட்சக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு அதனை கட்ட முடியாமல் செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் பீளமேடு போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வெளியில் செல்லவே பெண்கள் அச்சப்படும் சூழல் உருவாகி வருகிறது. குறிப்பாக கோவையில் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள், பேருந்துகள், கடை வீதிகள், ஸ்கூட்டரில் செல்லும் பெண்கள், பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும் பெண்கள், வாசல் கூட்டும் பெண்கள், சாலையில் தனியாக செல்லும் பெண்கள் என தொடர்ந்து குறிவைத்து இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதில், கல்லூரி இளைஞர்கள், பெண்கள் என பலரும் ஈடுபடுவதும்தான் அதிர்ச்சிகரம். ஊர் சுற்ற, ஆடம்பரமாகச் செலவு செய்ய, அதிக கடன்களை வாங்கி சிக்கிக் கொள்ளும் நபர்கள் பலரும் செயின் பறிப்பில் ஈடுபடுவதை பகுதி நேர தொழிலாகவே மாற்றிவிட்டனர் என்று சொல்லும் அளவுக்கு இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பெண்கள் சொந்தக் காலில் நிற்பதற்காகவும், தங்களுடைய வீட்டின் பொருளாதார சூழ்நிலையை முன்னேற்றம் அடையச் செய்வதற்காகவும் மகளிர் சுய உதவிக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களால் பலரது வாழ்க்கையிலும் விடியல் ஏற்பட்டுள்ளது. சொந்த தொழில் தொடங்கி தற்போது பல பெண்கள் தொழில்முனைவோராக மாறியுள்ளனர். இவ்வாறு வழங்கப்படும் கடனை சிலர் தவறான வழிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், திருப்பூரைச் சேர்ந்த பெண்கள் இருவர் மகளிர் சுய உதவிக் குழுக்களில் லட்சக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு அதனை கட்ட முடியாமல் செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் பீளமேடு போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணவேணி (37) மற்றும் அபிராமி (36). இவர்கள் சுய உதவி குழுக்கள் மூலமாக லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளனர். கடன்களுக்கான தொகையை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதையடுத்து, கிருஷ்ணவேணியும், அபிராமியும் கடன் தொகையை திருப்பிச் செலுத்த திட்டமிட்டு செயின் பறிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் கீதாமணி. 54 வயது பெண்ணான இவர் தன் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது கிருஷ்ணவேணி மற்றும் அபிராமி அங்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, கீதாமணியிடம் அந்தப் பெண்கள் இருவரும் பேச்சு கொடுத்துள்ளனர். உங்கள் கழுத்து பகுதியில் எறும்பு இருப்பதாக சொல்லி அதை தட்டி விடுவது தட்டிவிட்டு, அவரின் கழுத்தில் இருந்த 4.5 சவரன் தாலி செயினை பறித்து சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த கீதாமணி என்ன செய்வதென்று தெரியாமல் சப்தம் போட்டுள்ளார். அவரது வீட்டின் அருகில் இருந்தவர்கள் அந்த இரண்டு பெண்களையும் விரட்டி சென்று பிடித்து, காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து கீதாமணி அளித்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணவேணி, அபிராமி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோல, கடந்த சில வாரங்களுக்கு முன்பு துடியலூர் அருகே ஒரு பெண்ணிடம் இந்த கும்பல் 5 சவரன் நகையை பறித்துள்ளது. மேலும், காந்தி மாநகர் பகுதியில் மற்றொரு பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவிவிட்டு செயின் பறிக்க முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply