மேட்டுப்பாளையம்: காந்தையாறு பாலம் தண்ணீரில் மூழ்கியதை அடுத்து, பரிசில் பயணம் துவங்கியது. கடலில் பாலம் கட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாலம் கட்ட வேண்டும் என, மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பேரூராட்சியில், காந்தவயலுக்கும் லிங்காபுரத்துக்கும் இடையே காந்தையாறு ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே, 20 ஆண்டுகளுக்கு முன் சிறிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.

பவானிசாகர் அணையில், 97 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது, பாலமும், சாலையும் தண்ணீரில் மூழ்கி விடும். அதன் பின், மலைவாழ் மக்களும், விவசாயிகளும் காந்தையாற்றை, பரிசல் வாயிலாக கடந்து வருவது வழக்கம்.
இந்நிலையில் தமிழக அரசு, காந்தையாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட, 15.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இப்பாலத்தை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க வேண்டும் என அறிவித்தது. 2023 பிப்ரவரி மாதம், பாலம் கட்டும் பணிகள் துவங்கின.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை காந்தையாற்றிலும், பவானி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனால், பாலம் கட்டுமான பணிகள் தடைபட்டன.
இரண்டு ஆண்டுகளில் ஆற்றின் குறுக்கே ஐந்து பில்லர்கள் அமைத்துள்ளனர். ஆற்றின் மையப் பகுதியில் இன்னும் ஒரு பில்லர் அமைக்க வேண்டும். பில்லர்கள் மீது நான்கு இடங்களில் மேம்பாலத்தின் மீது சாலை அமைத்துள்ளனர்.
நீர்மட்டம் உயர்வு
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மழையால் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.தற்போது, அணையின் நீர் மட்டம், 96 அடியை எட்டியது. அதனால் அணையின் நீர்த்தேக்க தண்ணீர் காந்தையாறு வரை தேங்கியுள்ளது. இதனால் காந்தையாற்றின் குறுக்கே, ஏற்கனவே கட்டியுள்ள சிறிய உயர்மட்ட பாலம், தண்ணீரில் மூழ்கியது.
தற்போது பாலத்தின் மீது இரண்டு அடிக்கும், சாலையில் மூன்று அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது.
இதனால் பள்ளி குழந்தைகள், பெண்கள் பாலத்தின் மீதும், சாலையிலும் தண்ணீரில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் பரிசல் பயணம் மீண்டும் தொடங்கியுள்ளது. தற்போது பள்ளி குழந்தைகளும், பெண்களும், இந்த பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.
பணிகள் மந்தம்
காந்தவயல் மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘பாலம் கட்ட அரசு நிதி ஒதுக்கி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் பாலம் வேலைகள் முழுமையாக நடக்கவில்லை. மிகவும் மெதுவாக வேலை நடக்கிறது.
தற்போது ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வந்ததால், பாலமும், சாலையும் மூழ்கியது. குழந்தைகள் ஆபத்தான நிலையில் பரிசலில் பயணம் செய்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம், கடலில் பாலம் கட்டும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, காந்தையாற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
Leave a Reply