அடுக்குமாடி வீடு கட்டும் பணி ஆமை வேகம்! நான்கு ஆண்டுகளாக இழுவை

கோவை; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், குளத்துப்பாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி, நான்கு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கிறது.

Latest Tamil News

நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்கள், வீடற்றவர்கள் மற்றும் குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், ஓட்டு வீடுகளில் வசிப்போருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தரப்படுகிறது. கோவையில் பல்வேறு இடங்களில் வசித்தவர்களுக்கு மாற்று வீடு வழங்கப்பட்டு இருக்கிறது.
குனியமுத்துார் அருகே குளத்துப்பாளையத்தில், நேதாஜிபுரம் திட்டப்பகுதியில், 6 ஏக்கரில், ரூ.57.60 கோடியில், 720 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி, அ.தி.மு.க., ஆட்சியின் போது துவக்கப்பட்டது.

தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் சேர்த்து, மொத்தம் நான்கு தளங்களுடன் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.

வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிப்பறை வசதியுடன் ஒவ்வொரு வீடும் கட்டப்படுகிறது. பயனாளிகள் பங்களிப்பு தொகையாக, ஒரு லட்சத்து, 18 ஆயிரத்து, 472 ரூபாயை, ஒரே தவணையில் செலுத்த வேண்டுமென வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.

இப்பகுதியில் வீடு ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம் என, வாரியம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இப்பகுதியில் புதிதாக, 720 குடும்பங்கள் குடியேறும் பட்சத்தில், அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.சாலை, குடிநீர், மழை நீர் வடிகால் உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டியிருக்கிறது. ஆனால், நான்கு ஆண்டுகளாக குடியிருப்பு கட்டும் பணி, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.