‘அரோகரா’ கோஷம் முழங்க மருதமலையில் சூரசம்ஹாரம் 

கோவை: மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்ச்சி, பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.முருகனின் ஏழாம் படை வீடாக, பக்தர்களால் போற்றப்படும் மருதமலை சுப்ர மணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழா கடந்த 22ல், காப்பு கட்டும் நிகழ்ச்சியோடு துவங்கியது.

அன்றாடம் யாக சாலை பூஜைகளும், அபிஷேக பூஜைகளும், சுவாமி திருவீதி உலா, விமரிசையாக நடந்தது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், நேற்று நடந்தது. பக்தர்கள் தரிசித்து, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’என்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடைகள், ஆபரணங்கள், மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு, முருகப் பெருமான் காட்சி அளித்தார்.இன்று காலை சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், சுப்பிர மணிய சுவாமி வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.வைபவத்துக்கு பின் சுப்பிரமணியசுவாமி -வள் ளி, தெய்வானையுடன் வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இதே போல், சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும், சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.