உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்கள் குவிந்ததால்… அதிகாரிகள் மிரட்சி!

கோவை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் இன்னும் பாதி கூட முடியாத நிலையில், ஒன்றரை லட்சம் மனுக்களுக்கு மேல் குவிந்துள்ளதால், 45 நாட்களுக்குள் அனைத்துக்கும் தீர்வு காண்பது எப்படி என்று அதிகாரிகள் மிரண்டு போயிருக்கிறார்கள்.’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம், கோவை மாவட்டத்தில் மூன்று கட்ட மாக நடத்தப்படுகிறது. ஜூலை 15 முதல் ஆக. 15 வரை முதல்கட்ட முகாம் நடந்தது; தற்போது இரண்டாம் கட்ட முகாம் துவங்கி, வார்டு வாரியாக நடத்தப்படுகிறது.

மகளிர் உரிமை தொகை, இலவச வீட்டு மனை, அடுக்குமாடி குடியிருப்பு, முதியோர் உதவி தொகை, திருமண உதவி தொகை உள்ளிட்ட போன்ற கோரிக்கைகளுடன் முதல் கட்ட முகாம்களில் மட்டும், 1,43,866 மனுக்கள் பெறப்பட்டன.

மருத்துவ காப்பீடு, புதிய ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, சொத்து வரி பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட, 14,641 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

இரண்டாம் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில், 19 முதல் முகாம் நடந்து வருகிறது.மூன்று நாட்களில், 9,545 மனுக்கள் பெறப்பட்டன. இதுவரை பெறப்பட்ட மனுக்கள் எண்ணிக்கை 1,53,411 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் 334 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதுவரை 144 முகாம் நடந்திருக்கிறது. இன்னும், 190 முகாம்கள் நடத்த வேண்டியுள்ளது.

இன்னும் இரண்டு லட்சம் மனுக்கள் வர வாய்ப்பு உள்ளதால், அதிகாரிகள் திகைத்து நிற்கிறார்கள். அனைத்து மனுக்கள் மீதும் 45 நாளுக்குள் தீர்வு காண்பது பெரும் சவால் என்கின்றனர்.

”ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும், மக்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு அதிகமான மனுக்கள் வந்திருக்காது.

”மனுக்களை படித்து பார்த்தால், எல்லாமே அந்தந்த அரசு துறை அலுவலகங்களில் வழக்கமாக செய்ய வேண்டிய வேலைகள் என்பது தெரிகிறது.

அங்கே வேலை நடக்காததால், மக்கள் இந்த முகாமுக்கு படையெடுத்து வருகிறார்கள்” என்று, உயர் அதிகாரி ஒருவர் நமது நிருபரிடம் தெரிவித்தார்.