சிறுத்தை தாக்கி அசாம் சிறுவன் பலி வால்பாறையில் அடுத்தடுத்து அதிர்ச்சி

வால்பாறை,: வால்பாறை அருகே எஸ்டேட்டில், பால் வாங்க சென்ற 8 வயது சிறுவனை, சிறுத்தை கவ்விச்சென்று கொன்றது.கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள வேவர்லி எஸ்டேட்டில், வனத்தை ஒட்டிய சோலைப்பகுதியில் உள்ள குடியிருப்புக்கு, அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சமீபத்தில் வந்தனர்.

நேற்று மாலை, 6:00 மணிக்கு, அசாம் மாநிலத்தை சேர்ந்த சொர்பத்அலி என்பவரின் மகன் நுாரல்இஸ்லாம், 8, அருகிலுள்ள கடைக்கு பால் வாங்க சென்றார். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால், அவரை தேடி பெற்றோர் கடைக்கு சென்றனர்.அப்போது, வழித்தடத்தில் 500 மீட்டர் தொலைவில் பால் பாக்கெட் கிடந்ததை கண்டனர். அதன் அருகில், ரத்தம் கொட்டியிருந்ததால் சப்தமிட்டுள்ளனர். அருகில் இருந்த தொழிலாளர்கள் வந்து தேடிய போது, புதருக்குள் சிறுத்தை கடித்த காயங்களுடன் சிறுவனின் சடலம் கிடந்தது.

தேயிலை செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை, சிறுவனை கவ்வி சென்று கொடூரமாக கொன்றது தெரியவந்தது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

வால்பாறை பச்சமலை எஸ்டேட்டில், ஜூன் 20ம் தேதி, 5 வயது சிறுமியை சிறுத்தை கவ்வி சென்று கொன்றது. இரண்டு ஆண்டுகளில் சிறுத்தை கவ்விச்சென்று மூன்று குழந்தைகளை கொன்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.