மீட்கப்பட்ட யானை குட்டியை யானை கூட்டத்தில் சேர்க்க முயற்சி

பொள்ளாச்சி; கோவை வனக்கோட்டம், சிறுமுகை வனச்சரகத்தில் கடந்த மாதம், 26ம் தேதி தாயை பிரிந்த நிலையில் தவித்த, 10 மாதங்களே ஆன ஆண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.குட்டி யானையை, டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு கடந்த, மாதம், 13ம் தேதிகொண்டு வந்தனர். சிறப்பு கூண்டில் அடைக்கப்பட்ட குட்டி யானை, ‘ஜம்போ’ என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. யானையை கவனிக்க இரு பாகன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குட்டி யானையை, தாய் யானைகள் இருக்கும் கூட்டத்தில் சேர்க்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: குட்டி யானைக்கு இரவில் சீரான இடைவெளியில், ஐந்து முதல் ஆறு லிட்டர் செயற்கை பால் வழங்கப்படுகிறது. தினமும் மேய்ச்சலுக்காக திறந்து விடப்படுவதால், ஆரோக்கியமாக உள்ளது. வளர்ப்பு யானைகளுடன் கலக்காமல் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறது.

மேலும், பழங்குடியினர், யானை கையாளுவோர், ஒரு குட்டியானையை, தாய் யானைகள் இருக்கும் கூட்டத்தில் இணைக்கும் முயற்சி எடுக்கப்படுகிறது. மறு இணைவு செய்வதற்கான முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.

இவ்வாறு, கூறினர்.

இந்நிலையில், வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹுவின், சமூக வலைதள பதிவில், ‘வனத்துறையினர் குட்டி யானையை, தாய் யானைகள் இருக்கும் கூட்டத்தில் இணைக்க பல மைல்கள் செல்கின்றனர். சாலைகளில் வனவிலங்குகள் பாதுகாப்பாக வழிநடத்த இரவு முழுவதும் காத்திருக்கின்றனர்,’ என போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.