வாழை ஆராய்ச்சி மையம் மேட்டுப்பாளையத்தில் அமைக்க வேண்டும்: விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பகுதியில் தமிழக அரசு வாழை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் வாழை முக்கியமாக பயிர் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக, பவானி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மேட்டுப்பாளையம், பவானிசாகர், மற்றும் அன்னூர் பகுதிகளில், வாழைகள் அதிக அளவில் பயிர் செய்து வருகின்றனர்.

இப்பகுதிகளில், நேந்திரன், கதளி, செவ்வாழை, தேன் வாழை, பூவன், ரஸ்தாலி, மொந்தன் ஆகியவை பயிர் செய்யப்படுகிறது. வாழை மரங்களில் இருந்து பல்வேறு வகையான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அதற்கான பயிற்சிகள் இல்லாததால், வாழை மரங்களை காலியிடங்களிலும், வயல்களின் ஓரங்களிலும், விவசாயிகள் போட்டு வருகின்றனர்.

பயிற்சி இதுகுறித்து காரமடையில் உள்ள ஸ்ரீ அரங்கநாதர் உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் முத்துசாமி கூறியதாவது:
மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 15,000 ஏக்கருக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் வாழைகளை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் பயிற்சி பெறுவதற்கு, மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பயிற்சி நிலையங்கள் இல்லை.

அதனால் திருச்சியில் செயல்பட்டு வரும் வாழை ஆராய்ச்சி மையத்தை போன்று, மேட்டுப்பாளையம் பகுதியிலும் வாழை ஆராய்ச்சி மையம் திறக்க வேண்டும். எந்த காலகட்டத்திற்கு என்னென்ன வாழை மரங்கள் பயிர் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

வேலைவாய்ப்பு மேலும் வாழைப்பழத் தோலிலிருந்து மாட்டு தீவனம், வாழைப் பட்டையிலிருந்து நார்கள், நூல்கள், ஜூஸ் உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரிக்கலாம். எனவே மேட்டுப்பாளையம் பகுதியில் வாழை ஆராய்ச்சி மையம் அமைத்தால், மேட்டுப்பாளையம், பவானி சாகர், புளியம்பட்டி, அன்னூர், ஆகிய விவசாயிகள் பயனடைவதோடு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பயிற்சி பெற வசதியாக இருக்கும். இதனால் இப்பகுதிகளில் சிறு தொழில்கள் துவங்கவும், அதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே தமிழக அரசு மேட்டுப்பாளையத்தில் வாழை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.

முதல் கட்டமாக சிறுமுகை பகுதியில், தோட்டக்கலை அலுவலகம் திறக்க வேண்டும். புதிய தொழில்நுட்பத்தை எவ்வாறு புகுத்துவது, மதிப்பு கூட்டி எவ்வாறு விற்பனை செய்வது. வாழை ஏற்றுமதி சம்பந்தமாக வழிகாட்டுதல் ஆகிய பணிகளை தோட்டக்கலை அலுவலர்கள் வாழை விவசாயிகளுக்கு பயிற்சியும், ஆலோசனைகள் வழங்கவும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.