கோவை:தமிழகத்தில் முதல் முறையாக கோவை அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை முடிவுகள் விரைந்து கிடைக்கும் வகையில், பார்கோடு மற்றும் ஆன்லைன் பதிவு முறை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இது குறித்து, மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செல்வராஜ் கூறியதாவது:
கோவை அரசு மருத்துவமனையில், தினசரி உள் மற்றும் புறநோயாளிகளாகவும், 9,000 பேர் சிகிச்சை பெறுகின்றனர். பல சிகிச்சைகளை துவக்க, ரத்த பரிசோதனை முடிவுகளுக்கு காத்திருக்கும் சூழல் இருந்தது. இதற்கு தீர்வுகாணும் வகையில், பார்கோடு மற்றும் ஆன்லைன் பதிவு செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் ஹெச்.எம்.ஐ.எஸ்., எனும் போர்டலில் பதிவு செய்யப்படுகிறது.
இதற்கு பொதுவான வாட்ஸாப் குழுவும் உள்ளதால், டாக்டர்கள் ரத்த பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன் வாயிலாக தெரிந்துகொண்டு, சிகிச்சைகளை துவக்க முடியும். பரிசோதனை முடிவுக்காக டாக்டர்கள் காத்திருக்கவோ, ஊழியர்கள் தாள்களை எடுத்துக்கொண்டு அலையவோ தேவையில்லை.
இதனால், தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்படுகிறது. இதற்கு அனைத்து துறையினருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இம்முறையை செயல்படுத்த, 20 கம்ப்யூட்டர்கள், 20 பிரின்டர்கள் மருத்துவமனையில் சுயநிதியில் இருந்து பெற்றுள்ளோம்.
இம்முடிவுகளை ஆன்லைன் போர்டலில் பதிவு செய்வதால், எப்போது வேண்டுமானாலும், எதிர்காலத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply