பணி நீட்டிப்பு தர மறுக்கும் பாரதியார் பல்கலை; ஓய்வு பெற உள்ள பேராசிரியர்கள் குமுறல்

கோவை : பாரதியார் பல்கலையில் விதிமுறைகளின்படி, பல்கலை பேராசிரியர்களுக்கு பணி கால நீட்டிப்பு வழங்காமல் இருப்பது சிக்கலை ஏற்படுத்துவதாக, பாரதியார் பல்கலை நிர்வாகம் மீது புகார் தெரிவிக்கப்படுகிறது.

Latest Tamil News

பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், எப்போது ஓய்வு பெற்றாலும், அந்த கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர். உதாரணமாக ஒரு பேராசிரியர், மார்ச் மாதம் ஓய்வு பெற்றால், அவர் அந்த ஆண்டின் மே மாதம் வரை, பணிபுரிய அனுமதிக்கப்படுவார்.பாரதியார் பல்கலையில் கடந்தாண்டு வரை, இந்நடைமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டு முதல், பேராசிரியர்கள் கட்டாயமாக ஓய்வு பெற அறிவுறுத்தப்படுகின்றனர்.

கடந்த மாதம் பேராசிரியர் ஒருவர் ஓய்வு பெற்றார். மாலை 5:30 மணிக்கு அவருக்கு பணி நிறைவடைந்த பின்னரும், ஓய்வு குறித்து எந்த ஒரு ஆணையும் வழங்கப்படவில்லை. அவருக்கு பணிகால நீட்டிப்பு உள்ளதா, இல்லையா என்பது தெரியாமல் திண்டாடினார். பல்கலை விதிகள் பேராசிரியர்கள் ஓய்வு குறித்து தெளிவாக தெரிவிக்கிறது. அப்படியிருக்கையில், அதை பின்பற்றாமல் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் பேராசிரியர்களை சிரமப்படுத்துவது ஏன்? அரசு இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

‘சிண்டிகேட், செனட் முடிவு செய்யும்’

உயர்கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி கூறுகையில், ”பல்கலைகளை பொறுத்தவரை இம்முடிவை, அந்தந்த பல்கலை சிண்டிகேட், செனட் முடிவு செய்யும். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வாய்ப்பு இருந்தால் வழங்கலாம். அரசு கல்லுாரிகளை பொறுத்தவரை, பணிக்கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. கல்வியாண்டு முழுவதும் அவர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுகின்றனர்,” என்றார்.