மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் பார்வையற்றோருக்கு திருப்தி இல்லை

கோவை; ”அரசு எடுக்கும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு திருப்திகரமாக இல்லை,” என, தேசிய பார்வையற்றோர் இணையம் தெரிவித்துள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளும் அவரவர் இல்லங்களுக்கே சென்றடையும் நோக்கில், தமிழ்நாடு உரிமைகள் திட்டம்(டி.என்., ரைட்ஸ்) செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், கடந்த இரு மாதங்களாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. தேசிய பார்வையற்றோர் இணைய திட்ட இயக்குனர் மனோகரன் கூறியதாவது:

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்போடு, மாற்றுத்திறனாளிகளையும் சேர்த்து கணக்கெடுப்பு நடத்தினர். அது சரியான கணக்கெடுப்பாக அமையவில்லை.

இன்று மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்துவது வரவேற்கத்தக்கது. நகரிலும், நகரை சார்ந்த இடங்களிலும் கணக்கெடுப்பு நடத்துகின்றனர். கிராமங்களில் நடத்துவதில்லை. உள்ளாட்சி, நகராட்சி, அங்கன்வாடி ஊழியர்கள் எங்களை மொபைல் போனில் அழைத்து விவரம் சேகரிக்கின்றனர். இது சரியாக அமையாது.சில தொண்டு நிறுவனங்களும், கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. அவர்களிடம் அதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை. அவர்கள் சில வகை மாற்றுத்திறனாளிகளை மட்டுமே கணக்கெடுக்கின்றனர்.

பொதுமக்களுக்கே ஆதார் அட்டை, 100 சதவீதம் இன்னும் சென்றடையவில்லை. இப்படியிருக்க, ஆதார் இருக்கும் மாற்றுத்திறனாளிகளை தான் கணக்கெடுப்போம் என்கின்றனர்.

தவிர, ‘யுனிக் டிஸபிலிட்டி அடையாள அட்டை'(யு.டி.ஐ.டி.) கேட்கின்றனர். தமிழகத்தில் 50 சதவீத மாற்றுத்திறனாளிகளிடம் தான் யு.டி.ஐ.டி. இருக்கும். அனைத்து மாற்றுத்திறனாளிகளிடமும், கணக்கெடுத்தால் மட்டுமே அரசின் நோக்கம், முழுமையாக நிறைவேறும்.

இவ்வாறு, மனோகரன் கூறினார்.

நகரை சார்ந்த இடங்களிலும் கணக்கெடுப்பு நடத்துகின்றனர். கிராமங்களில் நடத்துவதில்லை. உள்ளாட்சி, நகராட்சி, அங்கன்வாடி ஊழியர்கள் எங்களை மொபைல் போனில் அழைத்து விவரம் சேகரிக்கின்றனர். இது சரியாக அமையாது.