வில்லங்கச் சான்று வாங்க லஞ்சத் தொகை; பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்கள் தவிப்பு

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வில்லங்கச் சான்று கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 17 பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களும், ஒரு பத்திரப்பதிவுத்துறை துணைத்தலைவர் அலுவலகமும் உள்ளன.

Latest Tamil News

ஒரு துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம், 50 எண்ணிக்கையிலான பத்திரப்பதிவு நடக்கிறது.

பத்திரப்பதிவுக்கான முக்கியமான ஆவணம் வில்லங்கச் சான்று, ஒவ்வொரு பத்திரங்களையும் பதிவு செய்வதற்கு முன், வில்லங்கச் சான்று பெற்று, அதில் வில்லங்கங்கள் ஏதும் இல்லாத பட்சத்தில், அந்த பத்திரம் பதிவு செய்யப்படும். வில்லங்கம் இருந்தால்,சரி செய்தபின்பே பத்திரம் பதிவு செய்யப்படும்.

அதனால், பத்திரங்கள் பதிவு செய்வதற்கு இணையாக வில்லங்கச் சான்று பெறுவதற்கும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்.

அதற்கென்று கட்டணங்கள் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

இது தவிர, வில்லங்கச் சான்று வழங்கும் பதிவுத்துறை ‘ஹெட்கிளார்க்கிற்கு’ தனியாக லஞ்சம் கொடுத்தால் மட்டுமே விரைவாக வில்லங்கச் சான்று கிடைக்கிறது.

இதையும் படிங்க

லஞ்சம் கொடுக்காத விண்ணப்பங்கள் நாள் கணக்கில் கிடப்பில் போடப்படுகின்றன.

அதைப்பற்றி விண்ணப்பதாரர் நேரில் சென்று கேட்டால், ‘பார்த்துக் கொண்டிருக்கிறோம்; சில மணி நேரம் கழித்து வாருங்கள்’ என்று சொல்லி, அலைக்கழிக்கப்படுகின்றனர்.

அதனால், கேட்கும் தொகையை லஞ்சமாக கொடுத்தே, பலரும் வில்லங்கச் சான்று பெற்று வருகின்றனர்.

ஆன்லைன் முறையில் வில்லங்கச் சான்றை பார்த்துக்கொள்ளலாம்.

அதை, பிரிண்ட்டாக எடுத்து ஆவணமாக இணைக்க முடியாது. பத்திரப்பதிவுக்கான வில்லங்கச் சான்றை விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி மட்டுமே பெற முடியும்.

இதுகுறித்து கோவை மண்டல பத்திரப்பதிவுத்துறை துணை தலைவர் பிரபாகரனிடம் கேட்டபோது, ”தாமதமின்றி விரைவாக வில்லங்கச் சான்று வழங்க அனைத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புகிறோம்; லஞ்சம் பெறக்கூடாது என்று எச்சரிக்கிறோம்.

”ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்தையும் கண்காணித்து, லஞ்சம் வாங்குவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

சிங்காநல்லுார் ‘டாப்’

வில்லங்கச் சான்று வழங்குவதில், வெள்ளலுாரில் உள்ள சிங்காநல்லுார் துணைப்பதிவாளர் அலுவலகம், கோவை மாவட்டத்திலேயே நெம்பர் ஒன் அலுவலகம் என்று சொல்லப்படுகிறது. எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்று வேண்டுமோ, அத்தனை ஆண்டுகளுக்கு கணக்கிட்டு, லஞ்சம் கொடுத்தால் மட்டுமே விரைவாக சான்று கிடைக்கிறது. லஞ்சத் தொகையை குறைத்துக் கொடுத்தாலோ, கொடுக்காமல் இருந்தாலோ சான்று கிடைப்பதில்லை. ஏதேனும் காரணம் கூறி, தவிர்த்து விடுகின்றனர்.