கோவை; புத்தக வாசிப்பை முன்பை விட அதிகமாக நேசிக்கத் துவங்கி விட்டனர் கோவை மக்கள். கொடிசியா சார்பில், நடைபெற்று வரும் பிரமாண்ட புத்தக கண்காட்சியில், திரண்டு வந்து புத்தகம் வாங்குகின்றனர். நான்கு நாட்களில் 25 ஆயிரம் வாசகர்கள் புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர்.கோவை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழா, கொடிசியா வணிக வளாகத்தில் நடந்து வருகிறது.

கண்காட்சியில், 300க்கும் மேற்பட்ட ஸ் டால்களில் பல லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன.
தினமும் சராசரியாக, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி செல்வதாக, இவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த புத்தக கண்காட்சியில் இலக்கியம், வரலாறு, அரசியல், ஆன்மிகம், மற்றும் போட்டித் தேர்வுக்கான நுால்கள் என, பல தலைப்புகளில் நுால்கள் இடம் பெற்றுள்ளன.
சிறுவர்களுக்கான நுால்கள், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் நுால்கள், கதைகள், காமிக்ஸ், புதிர் மற்றும் வினா – விடை நுால்கள், எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கான நீதி கதைகள், கார்ட்டூன் புக்ஸ், கலரிங் புக்ஸ், கலர் ஸ்கெட்ச் புக்ஸ், மேஜிக் ஸ்டோரி புக்ஸ், இங்கிலீஸ் அல்பா பெட்ஸ் மற்றும் மேக்ஸ் புக்ஸ் என, ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.பெற்றோ ர்கள் குழந்தைகளை அழைத்து வந்து, அவர்கள் விரும்பிய புத்தகங்களை அதிகம் வாங்கி செல்கின்றனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், தினமும் பள்ளி வாகனங்களில் வந்து நுால்களை வாங்கி செல்வதை காண முடிகிறது.
தள்ளுபடியும் உண்டு 10 ரூபாய் முதல் 5,000 ரூபாய் விலை உள்ள புத்தங்கள் கிடைக்கின்றன. இங்கு வாங்கும் நுால்களுக்கு, 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பல ஆங்கில கதை புத்தகங்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன.
வரும் 27ம் தேதி வரை காலை 10:00 முதல், இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது . நான்கு நாட்களில் 25 ஆயிரம் வாசகர்கள் கண்காட்சியை பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கி சென்று இருப்பதாக, கண்காட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
‘கடந்த நான்கு நாட்களில்
25 ஆயிரம் பேர் விசிட்’
கோவை கொடிசியா புத்தக கண்காட்சி தலைவர் ராஜேஷ் கூறுகையில், ” கொடிசியாவில், பல கண்காட்சிகள் நடக்கின்றன. அதை பார்வையிட வரும் மக்கள், 25 சதவீதம் பேர்தான் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். ஆனால் புத்தக கண்காட்சிக்கு வருபவர்கள் எல்லோரும், மகிழ்ச்சியுடன் புத்தகம் வாங்கி செல்கின்றனர். கடந்த ஞாயிறு மட்டும், 13 ஆயிரம் பேர் கண்காட்சிக்கு வந்துள்ளனர். இந்த நான்கு நாட்களில், 25 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, வாய்ப்பு உள்ளது,” என்றார்.
அறிவுப்பசியும் வயிற்றுப்பசியும்
கலெக்டர் உத்தரவால் தீர்கிறது
தினமும் ஐந்து அரசு பள்ளிகளில் இருந்து, மாணவர்களை அழைத்து வந்து புத்தக கண்காட்சியை பார்வையிட வைக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தினமும் 200 அரசு பள்ளி மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு செல்கின்றனர். கண்காட்சிக்கு வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடிசியா சார்பில், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது.
‘தினமலர்’ ஸ்டாலில்
தரமான புத்தகங்கள்
கோவை புத்தக கண்காட்சியில் உள்ள, ‘தினமலர்’ நாளிதழ் ஸ்டாலில், தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியிட்டுள்ள நுால்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. கண்காட்சிக்கு வரும் ஏராளமான ‘தினமலர்’ வாசகர்கள், ‘தினமலர்’ ஸ்டாலுக்கு சென்று, புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். ‘மகா பெரியவா’ ‘அந்துமணி பதில்கள்’, ‘சோழர்கள் இன்று’, ‘உங்களில் ஒருவன்’ மற்றும் ஆன்மிக நுால்களை வாசகர்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
Leave a Reply