சாப்பிட வாங்க செல்லங்களா! யானை, மானுக்கு ஊட்டச்சத்து… குட்டைகளில் உப்பு கட்டி வைப்பு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகள், குட்டைகளில் வனவிலங்குகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கவும், நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்கவும் உப்புக்கட்டிகளை வனத்துறையினர் வைத்து வருகின்றனர்.மேட்டுப்பாளையம் வனச்சரகம், 9,780 எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. குன்னுார், கோத்தகிரி உட்பட மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதிகள் இந்த வனச்சரகத்தில் உள்ளன. இங்கு புலி, யானை, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி என பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.

வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில், தினமும் தண்ணீர் நிரப்பப்படுகிறது. அதே போல் வனவிலங்குகளின் உடல் நலனிலும் அக்கறை காட்டும் வகையில், அவைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்கும் வகையில் உப்பு கட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றன. மேட்டுப்பாளையம் வனச்சரகம் புள்ளி மான் குட்டை பகுதியில் வனவர் சிங்கார வேலு தலைமையிலான வனத்துறையினர் உப்பு கட்டிகளை வைத்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிக்குமார் கூறியதாவது:

தண்ணீரை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க, மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில், அடர் வனப்பகுதியில் உள்ள 18 தண்ணீர் தொட்டி, குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. தண்ணீர் நிரப்புவதற்கு முன்பாக தொட்டிகள் சுத்தம் செய்யப்படுகின்றன. இதில் மான், யானை, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடிக்கின்றன.

வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் அதே நேரத்தில், அவைகளின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக உப்பு கட்டிகளை வைத்து வருகிறோம். இதில் இரும்பு, சோடியம், மெக்னிசியம், ஜின்க், காப்பர், செலினம், கோபால்ட் உள்ளிட்ட பல்வேறு தாதுப் பொருட்கள் அடங்கிய சத்துகள் உள்ளன.

யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இதனை விரும்பி சாப்பிடும். உப்பு கட்டிகளால் வனவிலங்குகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலும் அதிகரிக்கிறது. தொட்டி ஒன்றுக்கு 1 கிலோ அளவிலான 5 உப்பு கட்டிகள் வைக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.