தொண்டாமுத்தூர்; மண் அள்ளாத விவசாயிகளுக்கும், மண் அள்ளியதாக விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை ரத்து செய்யாவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என, தமிழக விவசாயிகள் சங்கத்தின், மாவட்ட தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பேரூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில், அரசு மற்றும் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக பல இடங்களிலும், மண் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், சட்ட விரோதமாக, தங்களது நிலங்களில் இருந்து மண் எடுத்ததாக, 356 விவசாயிகளுக்கு, லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதித்து, நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் கனிம வளத்துறையினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், மண் எடுத்ததாக கூறப்படும் இடங்களில், அப்பகுதி விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிசாமி, துணைத் தலைவர் பெரியசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அதன்பின், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டவிரோதமாக மண் எடுத்தவர்கள் மீது, கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள், கள ஆய்வு செய்யாமல், ட்ரோன் வாயிலாக மட்டுமே ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், விவசாயிகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதில், மண் எடுக்காதவர்கள் மற்றும் அரசு மானியத்தில் பண்ணை குட்டை அமைத்த இடத்திற்கும் அபராதம் விதித்துள்ளனர்.
எந்த தவறும் செய்யாதவர்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சம்பவ இடங்களை, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
மண் எடுக்காத விவசாயிகளுக்கு, விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
Leave a Reply