கோவை: கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் மாதிரி பரிசோதனைகளின் முடிவில், தரமற்ற பொருட்கள் விற்றதாக 61 நிறுவனங்கள், கடைகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், ஒவ்வொரு மாதமும் கடைகள், உணவு தயாரிப்பு இடங்கள், ஹோட்டல்கள், தெருவோர கடைகள், தண்ணீர் கேன் நிறுவனங்கள், கேட்டரிங் நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்படுகிறது. பண்டிகை காலம் துவங்கியிருப்பதால், பேக்கரிகள், இனிப்பகங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

ஜூன் முதல் மேற்கொண்ட ஆய்வுகளில், 324 உணவு மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. தரமில்லாதவை என, உறுதி செய்யப்பட்ட மாதிரிகளின் உரிமையாளர்கள் மீது, வழக்கு பதியப்பட்டுள்ளன.
சிறு தானியங்கள், சம்பா ரவா ஆகிய மாதிரிகளில், நிர்ணயித்த அளவை காட்டிலும், பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு இருப்பது தெரியவந்தது.
இயல்பாகவே, சிறுதானியங்களை சேகரித்து வைக்கும்போது பூச்சி வருவது இயல்பு. அதற்கான பாதுகாப்பு செயல்பாடுகளில் பூச்சிக்கொல்லி மருந்து அளவுக்கு மீறி பயன்படுத்தப்பட்டதா அல்லது விவசாயிகளின் நிலங்களில் இருந்து வரும்போதே, அதிக பூச்சிக்கொல்லி கலப்புடன் வருகிறதா என்ற ஆய்வு, உணவு பாதுகாப்புத்துறை, வேளாண் துறை தரப்பில், உயர்மட்ட அளவில் நடந்து வருகிறது.மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவிடம் கேட்டபோது, ”25 மாதிரிகள் தரமில்லாத பிரிவிலும், பாதுகாப்பில்லாத பிரிவில் 27 மாதிரிகள், லேபிள் விதிமுறைகள் பின்பற்றாமல் இருந்ததாக 9 மாதிரிகள் என, 61 நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்பட்டது.
சிறுதானியங்கள், சம்பா ரவை போன்ற மாதிரிகளில், பூச்சிக்கொல்லி மருந்து பரிந்துரைக்கப்பட்ட அளவை காட்டிலும், சற்று அதிகமாக உள்ளதை காண்கிறோம்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் கேட்டதற்கு, ‘கொள்முதல் செய்து நேரடியாக விற்பனைக்கு வைக்கின்றோம்; வேறெந்த செயல்பாடும் மேற்கொள்வதில்லை’ என தெரிவித்துள்ளனர்.
விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு குறித்து கண்காணிக்க, வேளாண் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. பொருட்களை தரமாகவும், பாதுகாப்பாகவும் தயாரித்து என்.ஐ.பி., ஆய்வகத்தில் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்க, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்,” என்றார்.
சிறுதானியங்கள், சம்பா ரவை போன்ற மாதிரிகளில், பூச்சிக்கொல்லி மருந்து பரிந்துரைக்கப்பட்ட அளவை காட்டிலும், சற்று அதிகமாக உள்ளதை காண்கிறோம். சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் கேட்டதற்கு, ‘கொள்முதல் செய்து நேரடியாக விற்பனைக்கு வைக்கின்றோம்; வேறெந்த செயல்பாடும் மேற்கொள்வதில்லை’ என தெரிவித்துள்ளனர்.
Leave a Reply